கொரோனா பரவல்.. நாட்டில் நிலைமை கையை மீறி செல்ல.. மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்.. சோனியா ஆவேசம்
டெல்லி: மோடி அரசு நிலைமையை மோசமாகக் கையாண்டுள்ளதாக விமர்சித்துள்ள சோனியா காந்தி, தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததன் மூலம் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கொரோனா சோதனை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி, மற்ற கட்சிகள் ஆளும் மாநிலமாக இருந்தாலும் சரி கொரோனா பாதிப்பு நிலவரங்களில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டும். தேர்தல் மற்றும் மத நிகழ்ச்சிகள் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தேசத்தின் நலனுக்கு முக்கியதுவம் கொடுத்து, அரசியல் கட்சிகளில் இதில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகள்
நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்குத்தான் நாம் அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே, மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவது, ஏற்றுமதி உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும். மோடி அரசு நிலைமையை மோசமாகக் கையாண்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்ததன் மூலம் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.

ராகுல் கடிதம்
முன்னதாக இது தொடர்பாக ராகுல் காந்தியும் நேற்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சுமார் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார். மேலும் மற்ற கொரோனா தடுப்பூசிகளுக்கும் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1.45 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாட்டில் தற்போது கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 794 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,436ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications