12 ஆண்டுகளில் முதல்முறை பெரிய தோல்வி? நர்ரேட்டிவ் செய்ய முடியாமல் தவிக்கும் மோடி! மாணவர்கள் சம்பவம்
டெல்லி: 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, இந்திய அரசியலின் போக்கையும் மக்களின் சிந்தனையையும் தங்களுக்குச் சாதகமாகத் திருப்புவதில் அந்த கட்சி அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. ஆனால் முதல்முறை பாஜக அப்படி செய்ய முடியாமல் சறுக்கி உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் எத்தகைய பெரும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், தங்களின் வலிமையான பிரச்சாரக் கட்டமைப்பால் அதைத் தகர்த்து, இறுதியில் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவது பாஜகவின் வழக்கமான பாணியாக இருந்தது.
பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டபோது, அவர்களை "காலிஸ்தானிகள்" என்றும் "தேசவிரோதிகள்" என்றும் அடையாளப்படுத்தி மற்ற மக்களின் ஆதரவைப் பெற்றது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாக்கில் போராட்டங்கள் வெடித்தபோது, அதை முஸ்லிம்களின் போராட்டம், பாகிஸ்தான் ஆதரவு என முத்திரை குத்தி தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது.

மணிப்பூர் போராட்டம் கூட சீனாவின் பண்டிங் என்று பாஜக பிரச்சாம் செய்தது. எதுவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதோ அல்லது பிரிவினைவாத சாயலிலோ பழியைப் போட்டு, மக்கள் மனநிலையைத் திசைதிருப்புவது அவர்களின் பிரதான ஆயுதமாக இருந்தது.
ஆனால், வரலாற்றில் முதன்முறையாக அந்தப் பிரச்சார வியூகம் சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது!
டெல்லியில் Cockroach Janta Party மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் பிரம்மாண்ட போராட்டம், பாஜகவின் 12 ஆண்டுகால தோற்கடிக்க முடியாத பிம்பத்திற்கு விழுந்த முதல் மற்றும் மிகப்பெரிய அடியாகும்.
அடித்து ஆடும் மாணவர்கள்
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராகத் தெருவில் இறங்கியுள்ளவர்கள் வெறும் ஏதோ ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதில் நாட்டின் ஏழை, நடுத்தர, பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அடங்குவர்.
இதன் காரணமாகவே, பாஜகவால் வழக்கம்போல இந்தப் போராட்டக்காரர்கள் மீது எவ்வித முத்திரையையும் குத்த முடியாமல் கைகள் கட்டப்பட்டுள்ளன.
தேசவிரோதிகள் எனச் சொல்ல முடியாத.. ஏனென்றால் போராடுவது நாட்டின் எதிர்காலமான மாணவச் செல்வாக்கள்.. மதச்சாயம் பூச முடியாது ஏனென்றால் இதில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என நாட்டின் அனைத்துப் பிரிவு இளைஞர்களும் கைகோர்த்துள்ளனர்.. இன்னொரு அரசியல் சதி எனக் கூற முடியாது ஏனென்றால்.. பாதிக்கப்பட்டது ஒவ்வொரு வீடுகளிலிருக்கும் பிள்ளைகள்!
முன்பெல்லாம் சமூக வலைத்தளங்களில் பாஜகவின் ஆதரவாளர்கள் மிக எளிதாக எதிர்-பிரச்சாரத்தை உருவாக்கி ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் இந்த முறை, இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் யூடியூப் என அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் மாணவர்களின் கொந்தளிப்பும், தடியடி நடத்திய காவல்துறைக்கு எதிரான விமர்சனங்களுமே முதன்மையாக டிரெண்ட் ஆகி வருகின்றன.
தகவல் தொடர்புத் துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் பாஜக தன் பிடியை முற்றிலும் இழந்து நிற்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
மோடி அரசின் இந்தத் தடுமாற்றமும், பொதுமக்களின் இந்த எழுச்சியும் இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கின்றன. 12 ஆண்டுகளில் முதன்முறையாக, ஆளுங்கட்சியின் பிரச்சாரத்தை விடவும், மக்களின் உண்மையான வேதனையும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளும் வெற்றி பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications
