அடுத்த முறையும் நான்தான் பிரதமர்! அப்போதும் எதிர்க்கட்சிகள் என்ன செய்வார்கள் தெரியுமா! மோடி அட்டாக்
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை உச்சத்தில் இருக்கிறது. இந்த 3 மாதங்களாகவே அங்கு மிக மோசமான வன்முறை, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

மணிப்பூர் வன்முறையை தடுக்க அம்மாநில பாஜக அரசு தவறிவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வந்த "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் மணிப்பூரில் இன்னுமே முழுமையாக அமைதி திரும்பவில்லை என்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: இதற்கிடையே மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கிடையே இந்த தீர்மானம் கடந்த மூன்று நாட்களாக விவாதம் நடைபெற்றது. இதில் முதல் நாளில் ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் முதல் நாளில் பேசவில்லை இரண்டாம் நாளில் தான் பேசினார்.
கடந்த 3 நாட்களாகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தலைவர்களும் பேசினர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் இருந்தும் தலைவர்கள் பேசினர். அதேபோல ஆளும் தரப்பிலும் எம்பிகள், அமைச்சர்கள் பேசினர். இன்று பேசிய நிர்மலா சீதாராமன் தமிழக அரசைக் கடுமையாகச் சாடி பேசியிருந்தார்.
பிரதமர் மோடி: இதனிடையே இந்த விவாதத்திற்குப் பதிலளித்த பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜகவிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் எப்படிக் கேட்க வேண்டும் என்று கூட எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை.. காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான தேர்தல் வியூகம் எதுவும் இல்லை. காங்கிரஸில் தொலைதூர பார்வை கொண்ட தலைவர்கள் இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் வறுமை உச்சத்தில் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை மீட்டுள்ளோம். நான் 3ஆவது முறையாகவும் பிரதமராக ஆட்சியைப் பிடிப்பேன். அப்போது இந்தியாவின் பொருளாதாரம் 3ஆவது இடத்திற்குச் செல்லும்.
கடும் தாக்கு: காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா மீது அக்கறை இல்லை. இவர்கள் நிச்சயம் 2028ஆம் ஆண்டிலும் தீர்மானத்தைக் கொண்டு வருவார்கள். அப்போதும் இந்தியா பொருளாதாரத்தில் 3ஆவது இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸை மக்கள் 2014இல் நிராகரித்தனர் என்றும் அதன் பிறகு காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து மக்கள் நிராகரித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸை நிராகரித்த மாநிலங்கள் எனக் காங்கிரஸ் தோல்வியடைந்த மாநிலங்களை அவர் பட்டியலிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் கடந்த 2014இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது என்றும் 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் மக்கள் தங்களுக்கே ஆதரவு கொடுத்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில் காங்கிரஸ் தொடங்கி பல்வேறு எதிர்க்கட்சிகளையும் மிகக் கடுமையாகச் சாடி பேசினார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால்களை வீசி வருவதாகவும் அதைக் கொண்டு ஆளும் தரப்பு தொடர்ந்து சதமடித்து வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை பாஜக வழங்கி வருவதாகவும் இதனால் இந்தியா பொருளாதாரம் அதள பாதாளத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications