மணிப்பூரில் குவிந்திருக்கும் உடல்கள் யாருடையது? உச்சநீதிமன்றத்தில் பரபர வாதம்! அரசு கூறிய ஷாக் தகவல்
டெல்லி: மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில் தலைநகர் இம்பால் பிணவறையில் ஏராளமான உடல்கள் குவிந்திருக்கும் நிலையில் அது யாருடையது என்பது பற்றி மணிப்பூர் அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான தகவலை முன்வைத்து வாதிட்டார்.
மணிப்பூரில் குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையேயான பிரச்சனை வன்முறையாக மாறியது. 3 மாதங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் 150க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஏராளமான பெண்களளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
இதற்கிடையே தான் மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக மணிப்பூர் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின்போது கொலின் கோன்சால்வ்ஸ் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடினர். அப்போது, ‛‛118 பழங்குடியினரின் உடல்கள் இம்பாலில் உள்ள பிணவறையில் உள்ளது. இந்த உடல்கள் பல மாதங்களாக அடையாளம் காணப்படாமல் அப்படியே உள்ளது. தற்போது உடல்கள் அழுகி வருகின்றன. இந்த உடல்களை அடையாளம் காண மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வன்முறையில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படாமல் உள்ளது'' என வாதிட்டார்.
இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ‛‛மணிப்பூரில் உரிமை கோரப்படாமல் உள்ள உடல்களில் பெரும்பாலானவை ஊடுருவல்காரர்களின் உடல்களாகும். மணிப்பூரை சேர்ந்தோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நிவாரணத்தை பொறுத்தவரை உடல்கள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட உள்ளது'' என்றார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் ‛‛இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். ஏனென்றால் இந்த உடல்களை பிணவறையிலேயே வைக்க முடியாது. அதோடு உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் உடல்களை அடையாளம் காண இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக தெரிவிக்க வேண்டும்.

மேலும் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனரா?. இதுவரை எத்தனை உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிணவறையில் எத்தனை உடல்கள் உள்ளன என்ற விபரங்களை வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications