“அவர்கள் குற்றவாளிகள் இல்லை”.. பாரத ரத்னா கொடுத்தும் விவசாயிகளை ஆதரித்த எம்.எஸ்.சுவாமிநாதன் மகள்
டெல்லி: "டெல்லி சலோ" போராட்டத்தை தொடங்கி இருக்கும் விவசாயிகளை குற்றவாளிகளைபோல் நடத்தக் கூடாது என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா சுவாமிநாதன் தெரிவித்து இருக்கிறார்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசு அண்மையில் இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது அறிவித்து கவுரவித்தது. இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன், "பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று வருகிறார்கள். அவர்களுக்கான சிறைகள் அரியானாவில் தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க பேரிகேட்டுகள் உட்பட அனைத்தும் தயாராக இருப்பதாகவும் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் எல்லோரும் விவசாயிகள். குற்றவாளிகள் அல்ல. நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுடன் பேச வேண்டும். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். நீங்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினால், எதிர்கால திட்டமிடல்களை மனதில் கொண்டு நமது விவசாயிகளுடன் பேச வேண்டும்." என்று தெரிவித்தார். பெங்களூரு இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் தலைவராக இருந்தவர் சுவாமிநாதன்.
இவரது மகளும் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும் இருந்த சௌமியா சுவாமிநாதனும் கலந்துகொண்டார். இந்திய வேளாண் துறையில் குறிப்பிடத்தக்க புரட்சியை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் செய்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்து இருப்பதை நாடே வரவேற்று இருக்கும் நிலையில் அவரது மகளோ, மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
ஏன் போராட்டம்: நாடாளுமன்றத்தில் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து தனிச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "டெல்லி சலோ" என்ற பெயரில் மாபெரும் போராட்டத்தை டெல்லியில் விவசாயிகள் முன்னெடுத்து உள்ளனர். பவானா மைதானத்தில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தை போல் டெல்லியை நோக்கி டிராக்டர்களில் விவசாயிகள் புறப்பட்டனர். கிசான் மஜ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் ஆதரவு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு டிராக்டர்களில் புறப்பட்டு சென்றனர்.
பஞ்சாபில் இருந்து 2000 டிராக்டர்கள், உத்தரப்பிரதேசத்தில் 500 டிராக்டர்கள், ராஜஸ்தானில் 200, அரியானா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் என சுமார் 3000 டிராக்டர்களுடன் டெல்லி எல்லைகளை நோக்கி விவசாயிகள் புறப்பட்டன. வட மாநில விவசாயிகளுடன் தென் மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி நோக்கி புறப்பட்டனர். டெல்லி நோக்கி டிராக்டர்களில் வரும் விவசாயிகளை தடுக்க, டயர்களை பஞ்சர் செய்யும் வகையில் ஆணி வேகத் தடைகள் அமைக்கப்பட்டன.
அத்துடன் தடுப்பு வேலிகள், பேரிகேடுகள், கான்கிரீட் தடுப்புகளும் வைக்கப்பட்டன. டெல்லி எல்லையை ஒட்டிய பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதையும் மீறி உள்ளே நுழைய முயலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதுடன் தடியடியும் நடத்தப்பட்டது. இதில் சில விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் விவசாயிகள் தொய்வின்றி டெல்லிக்குள் நுழைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications