"மிகவும் காஸ்ட்லி நகரங்கள்.." டாப் இடம் பிடித்த மும்பை.. சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா
டெல்லி: உலகில் வாழ மிகவும் காஸ்ட்லியான நகரங்கள் குறித்த பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இந்தியாவில் காஸ்ட்லியான நகராக மும்பை இருக்கிறது. சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்கள் எங்கே உள்ளது என்பதை பார்க்கலாம்.
உலக மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள். நகரில் இருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம். இதனால் நகரங்களில் வாடகை தொடங்கி அனைத்தும் காஸ்ட்லியாக மாறுகிறது.

இதற்கிடையே Mercer என்ற அமைப்பு சமீபத்தில் காஸ்ட்லி நகரம் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தது. எந்த நகரில் வாழ அதிகம் செலவாகிறது என்பதை வைத்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருந்தனர்.
காஸ்ட்லி நகரம்: உலகெங்கும் இருக்கும் 227 நகரங்களில் ஆய்வு செய்து இந்த பட்டியலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். வீட்டு வாடகை, போக்குவரத்து, உணவு, உடை, பொழுதுபோக்கு என பல மொத்தம் 200 பொருட்களின் விலையைக் கணக்கிட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் பார்க்கும் போது ஹாங்காங் தான் அதிக காஸ்ட்லியான நகராக இருக்கிறது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 7ஆவது இடத்தில் சிங்கப்பூர் ஒரே ஆண்டில் 6 இடங்கள் மேலே வந்து 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மிகவும் மலிவான நகரங்களில் கியூபா தலைநகர் ஹவானா முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல பாகிஸ்தானின் இரண்டு நகரங்களான கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தும் மலிவான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் இருந்தும் பல நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்திய நகரங்கள்: இந்திய அளவில் பார்க்கும் போது காஸ்டிலியான நகராக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை இருக்கிறது. டெல்லி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு தலைநகர் சென்னை இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பெங்களூர் 4ஆவது இடத்திலும் ஹைதராபாத் 5ஆவது இடத்திலும் உள்ளது.
ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் மகாராஷ்டிராவில் மற்றொரு நகராக இருக்கும் புனேவுடன் ஒப்பிடும் போது மும்பை இரண்டு மடங்கு காஸ்ட்லியாக இருக்கிறது. அதேபோல கொல்கத்தா மற்றும் புனே தான் மலிவான நகரமாக இருக்கிறது.
சர்வதேச அளவில் பார்க்கும் போது மும்பை 147வது இடத்திலும், டெல்லி 169வது இடத்திலும் இருக்கிறது. அதேபோல சென்னை (184), பெங்களூரு (189), ஹைதராபாத் (202), கொல்கத்தா (211) மற்றும் புனே (213) இடங்களைப் பிடித்துள்ளனர்.

வீட்டு வாடகை: மும்பையுடன் ஒப்பிடும்போது ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, புனே மற்றும் பெங்களூரில் வீட்டு வாடகை மற்றும் ஹோட்டல் செலவுகள் குறைவு. இதில் கொல்கத்தாவில் தான் வீடு மற்றும் ஹோட்டல் விலை மிகக் குறைவாக இருக்கிறது.
அதேநேரம் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, அனைத்து இந்திய நகரங்களிலும் வாடகை உயர்ந்துள்ளது. இது அதிகப்படியான மக்கள் நகரங்களை நோக்கி வருவதையே காட்டுகிறது. குறிப்பாக மும்பையில் தான் வாடகை அதிகளவில் உயர்ந்துள்ளது. அதேபோல ஹைதராபாத்தில் வாடகை சற்று அதிகரித்துள்ளது என்றும் பெங்களூர், டெல்லி, புனே மற்றும் சென்னையில் வீட்டு வாடகை கணிசமாகவே உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications