என்னங்க சொல்றீங்க.. சர்ருனு சரியும் முஸ்லீம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை! பாஜக வந்த பின் பகீர் மாற்றம்!
டெல்லி: இந்திய அரசியலில் கடந்த ஒரு தசாப்தமாக எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் உள்ள மாநில சட்டப் பேரவைகளில் இஸ்லாமிய எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைந்து வருவது அரசியல் ஆய்வாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு மத்திய அரசில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் அரசியல் முறையே மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
முன்பு சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவம் முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெற்றி வாய்ப்பு, பெரும்பான்மை சமூக வாக்குகள், கூட்டணி கட்சிகளின் முடிவுகள் போன்ற அம்சங்கள் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.

இதன் தாக்கம் நேரடியாக முஸ்லிம் வேட்பாளர்களின் எண்ணிக்கையிலும் பிரதிபலித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில் இந்தியாவின் பல மாநில சட்டப்பேரவைகளில் மொத்தம் 339 முஸ்லிம் எம்எல்ஏக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 282 ஆக குறைந்துள்ளது.
முஸ்லிம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை
இது வெறும் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு மட்டுமல்ல, அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் இந்த மாற்றம் மிகவும் தெளிவாக தெரிகிறது. உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 25 சதவீதம் இருக்கிறது. ஆனால் 403 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டப்பேரவையில் தற்போது 31 முஸ்லிம் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு முன்பு அந்த எண்ணிக்கை 63 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் உறுப்பினர்கள்
அதேபோல் பீகாரில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 19 இலிருந்து 11 ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தானில் 11 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 6 ஆக சரிந்துள்ளது. பல மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை கணிசமாக இருந்தாலும், அதற்கேற்ற அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாஜக ஆட்சி
பாஜகவும் கடந்த சில ஆண்டுகளில் தனது தேர்தல் அணுகுமுறையில் மாற்றங்களை செய்துள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்திய பாஜக, பின்னர் அந்த முயற்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அசாமில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்த பிறகு, கட்சியின் சிறுபான்மை பிரிவே கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஜம்மு-காஷ்மீர்
தற்போது தேசிய அளவில் பாஜகவில் வெறும் இரண்டு முஸ்லிம் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். மணிப்பூரைச் சேர்ந்த அச்சப் உத்தீன் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த தபஸ்ஸுல் ஹுசைன் மட்டுமே பாஜக சார்பில் சட்டப்பேரவையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் என கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சிதான் தேசிய அளவில் அதிக முஸ்லிம் எம்எல்ஏக்களை கொண்ட கட்சியாக உள்ளது. காங்கிரஸில் தற்போது 61 முஸ்லிம் எம்எல்ஏக்கள் உள்ளனர். அதற்கு அடுத்ததாக ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியில் 39 பேரும், திரிணாமுல் காங்கிரஸில் 37 பேரும், சமாஜ்வாதி கட்சியில் 34 பேரும் உள்ளனர்.
முஸ்லிம் பிரதிநிதித்துவம்
கேரளாவில் மட்டும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மக்கள் தொகைக்கு நெருக்கமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்கு சுமார் 26 சதவீத முஸ்லிம் மக்கள் தொகைக்கு இணையாக சட்டப்பேரவையிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவை
தமிழகத்திலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தற்போதைய சட்டப்பேரவையில் திமுக சார்பில் 3 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2 பேரும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 6 சதவீதத்துக்கும் மேல் முஸ்லிம் மக்கள் தொகை இருந்தாலும், ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட சட்டப்பேரவையில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
முஸ்லிம் சமூகம்
இது ஒரு கட்சியால் மட்டும் ஏற்பட்ட மாற்றமல்ல. நாடு முழுவதும் பெரும்பாலான கட்சிகளும் வெற்றி வாய்ப்பை முன்னிலைப்படுத்தி வேட்பாளர்களை தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன. சமூக பிரதிநிதித்துவம், சிறுபான்மை சமநிலை போன்றவை இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதேநேரத்தில், முஸ்லிம் சமூகத்தின் வாக்கு சிதறல், கூட்டணி அரசியல், பிராந்திய கட்சிகளின் எழுச்சி போன்ற காரணங்களும் இந்த மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications