‛‛என் குழந்தைகளின் படிப்பு மட்டும் பாதிக்கப்படவே கூடாது’’.. வக்கீலிடம் கோரிக்கை வைத்த ஜாபர் சாதிக்
டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இன்று டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கை அவரது வழக்கறிஞர் சந்தித்தார். அப்போது இறைவன் பார்த்து கொள்வார் எனக்கூறியதோடு, எந்த காரணம் கொண்டும் குழந்தைகளின் படிப்பு மட்டும் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளும்படி கோரிக்கை வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவில் சென்னை மேற்க மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் எனும் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போதைப்பொருள் தயாரிக்கும் பொருளான சூடோபெட்ரின் கடத்தலில் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் தலைமைறைவானர். அவரை தேடி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை வந்தனர். அவரது வீட்டில் ரெய்டு நடத்தி சீல் வைத்தனர். ஜாபர் சாதிக்கிற்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே தான் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது அவரை 7 நாள் காவலில் எடுத்து டெல்லியில் வைத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நெட்வொர்க் பற்றிம், மேலும் தொடர்புடைய நபர்கள் பற்றியும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சதா என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான் ஜாபர் சாதிக்கை இன்று மாலையில் டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரது வழக்கறிஞர் பிரபாகரன் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் வரைஇருவரும் பேசியுள்ளனர். நீதிமன்றம் அனுமதி மறுத்தும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மறுப்பதாக பிரபாகரன் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஜாபர் சாதிக்கை சந்தித்து பேசினார்.
இந்த வேளையில் ஜாபர் சாதிக் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும்படி வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜாபர் சாதிக், ‛நான் நலமாக இருக்கிறேன். எனக்கு 3 வேளையும் அதிகாரிகள் சரியாக உணவு தருகின்றனர். மருத்துவ பரிசோதனைகளும் செய்கின்றனர். எனது குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள். இந்த பிரச்சனையால் எந்த காரணம் கொண்டும் எனது பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது. நான் குடும்பத்தினரிடம் பேச வேண்டும். இந்த பிரச்சனையை இறைவன் பார்த்து கொள்வான்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications