NEET: வெளியானது நீட் தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோடு செய்வது எப்படி?
டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 27) காலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான அனுமதிச் சீட்டு (Hall Ticket) இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட் நேற்று வெளியாக இருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இன்று (ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது. அதன்படி, இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
என்டிஏ இணையதளத்தில் (https://neet.nta.nic.in) நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்ப பரிசீலனையும் முடிந்த நிலையில், NTA இணையதளத்தில் இன்று ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் தேர்வர்களின் பெயர், தேர்வு மையத்தின் முழு முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
நீட் தேர்வு மே 3 ஆம் தேதி மதியம் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்கள் சிரமமின்றித் தேர்வு எழுதத் தேசியத் தேர்வு முகமை (NTA) விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சில மாணவர்களுக்குத் தங்களது இருப்பிடத்திலிருந்து தேர்வு மையம் தூரமாக அமைய வாய்ப்புள்ளதால், ஹால் டிக்கெட் வெளியான உடன் மாணவர்கள் தங்களது மையங்களைச் சரிபார்த்து, முன்கூட்டியே செல்லத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் இருந்து தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு மையம், தேர்வு மையத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுத செல்லும்போது தேர்வறைக்கு செல்ல இந்த ஹால்டிக்கெட்டை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications