எலும்பு கூட கிடைக்கல.. ஒரே இடத்தில் உயிரிழந்த 93 பேர்! நேபாள வெள்ளத்தின் கொடூரம்
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராசுவாகதி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் 93 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சுரங்கத்தின் கடைசி பகுதி வரை மீட்புக் குழுவினர் சென்ற போதிலும் அங்கு யாரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேபாளத்தில் கடந்த வாரம் திடீரென வெள்ளம் தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டது. நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வெள்ளம் கோர தாண்டவம் ஆடியது. இமயமலையில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி உடைந்ததே இந்த வெள்ளத்திற்கு காரணமாக இருந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வெள்ளம் நேபாளத்தின் ராசுவாகதி நீர்மின் திட்டத்திலும் பேரழிவை ஏற்படுத்தியது.

மாயம்
அங்கிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருப்பார்கள் என நம்பப்பட்டது. இதனால் அவர்களை மீட்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடைபெற்றது. அவர்கள் சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜனும் கூட அனுப்பப்பட்டது. வெள்ளம் வடிந்த நிலையில், மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சுரங்கத்தின் இறுதி பகுதி வரை சென்ற போதிலும் மீட்பு குழுவினரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வெப்பத்தை உணரும் திறன் கொண்ட ட்ரோன்கள் மூலம் தீவிரமாக தேடிய போதும் யாரும் இருப்பதற்கான தடயங்கள் கிடைக்கவில்லை.
வெள்ளப்பெருக்கு
ராசுவா மாவட்டத்தில் உள்ள 111 மெகாவாட் திறன் கொண்ட இந்த ராசுவாகதி நீர்மின் திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது கோசி ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. இதையடுத்து நேபாள ராணுவம் தலைமையில் ட்ரோன் நிபுணர்கள் அடங்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மீட்பு குழுவினர் சுரங்கத்திற்குள் சென்று அதன் கடைசி பகுதி வரை சென்றனர். நேரடியாக சென்று ஆய்வு செய்வது ஆபத்தானதாகவும் கடினமாகவும் இருந்த பகுதிகளில், வெப்பத்தை உணரும் திறன் கொண்ட தெர்மல் ட்ரோன்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களின் வெப்பம் தனியாக தெரியும் என்பதால் இந்த முறை பின்பற்றப்பட்டது. ஆனால், சுரங்கத்திற்குள் யாரும் இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் ட்ரோன்களில் கிடைக்கவில்லை. சுரங்கத்தின் இறுதி வரை சென்ற போதிலும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து ராசுவாகதி நீர்மின் திட்ட சுரங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் கைவிடப்பட்டதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. சுரங்கத்தில் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீட்பு குழுவினர் அங்கிருந்து வெளியேறி ராசுவா மாவட்டத்தின் துன்சே பகுதிக்கு திரும்பினர்.
பேரழிவு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாக பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ளனரா, பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனரா அல்லது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனரா என்பதை மீட்புக் குழுக்களால் இப்போது வரை உறுதி செய்ய முடியவில்லை.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவால் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நீர்மின் திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் 933 பேர் காணாமல் போனதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை பல்வேறு நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் இருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அப்பர் திரிஷூலி-1 நீர்மின் திட்டத்தில் இருந்து மட்டும் 254 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், லாங்டாங் கோலா நீர்மின் திட்டத்தில் இருந்து 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மற்றொரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள 11 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 897 தொழிலாளர்கள் இன்னும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ள நீர்மின் திட்டங்களில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சுரங்கங்களுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதையே உறுதி செய்ய முடியாத சூழல் நிலவுவதால், இது நேபாள மீட்பு படையினருக்கு மிக பெரிய சவாலாக மாறியுள்ளன.


Click it and Unblock the Notifications
