காசு கொடுத்தாலும்.. மக்கள் விரும்பும் அளவுக்கு காஸ் சிலிண்டர் வாங்க முடியாது! வருகிறது கட்டுப்பாடு
டெல்லி: இனி காஸ் சிலிண்டர்களை தேவைப்படும் போதெல்லாம் மக்கள் வாங்க முடியாத வகையில் புதிய கட்டுப்பாடு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண வீக்கமும், எரிபொருள் தட்டுப்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே காஸ் சிலிண்டர்களை மக்கள் புக் செய்து வாங்கிக் கொள்ள முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

அதிகரித்தது காஸ் சிலிண்டர் பயன்பாடு..
இந்தியாவில் கிட்டத்தட்ட பெரும்பாலான குடும்பங்கள் காஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு மாறிவிட்டன. கிட்டத்தட்ட 92 சதவீத குடும்பங்கள் சமையலுக்கு காஸ் சிலிண்டரை பயன்படுத்துவதாக புள்ளிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாளொன்றுக்கு கோடிக்கணக்கான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கும் வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு
இதனால் காஸ் சிலிண்டரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த சூழலில், உக்ரைன் - ரஷ்யா போரால் உலக அளவில் பணவீக்கமும், எரிபொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டது. இது இந்தியாவிலும் எதிரொலித்த காரணத்தால் காஸ் சிலிண்டருக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. உக்ரைனில் இருந்து எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றை இந்தியா வாங்கி வரும் போதிலும் இந்த தட்டுப்பாட்டை சரிசெய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் முறைகேடு செய்வதாக புகார்
அது தவிர, மானிய விலையை விட்டுக்கொடுத்த வாடிக்கையாளர்கள், தற்போது எவ்வளவு வேண்டுமானாலும் காஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதனால் இந்த பிரிவின் கீழ் வரும் பெரும்பாலான
வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கும் அதிகமாக காஸ் சிலிண்டர்களை வாங்கி,
அவற்றை அதிக விலைக்கு விற்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள்
வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மானிய விலை வாடிக்கையாளர்களுக்கு
உரிய நேரத்தில் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வந்தது கட்டுப்பாடு...
இந்நிலையில், இதுபோன்ற காரணங்களை பரிசீலித்த மத்திய அரசு, காஸ் சிலிண்டர்கள் வாங்குவதற்கு உச்ச வரம்பை கொண்டு வந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. அதன்படி, மானியற்ற விலையில் காஸ் சிலிண்டர்களை வாங்குவோர், இனி ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மாதம் இரண்டு சிலிண்டர்களை மட்டும் தான் இனி அவர்களால் வாங்க முடியும்.
அதேபோல, மானிய விலை வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மட்டுமே பெற முடியும். அதற்கு மேல் வாங்க வேண்டுமெனில், அவர்கள் மானியமற்ற விலையை கொடுத்துதான் காஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டும். ஒருவேளை, கூடுதலாக காஸ் சிலிண்டர்கள் தேவைப்படுவோர் அதற்கான சான்றுகளை காட்டினால் மட்டுமே அவர்களுக்கு கூடுதல் சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications