40% வரை குறையும் டோல் கட்டணம்.. விதிகளை மொத்தமாக மாற்றிய மத்திய அரசு! வந்த முக்கிய அறிவிப்பு
டெல்லி: தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி தரும் முக்கிய அறிவிப்பை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. பாலங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அதிகம் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 சதவீதம் வரை டோல் கட்டணம் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் அடிக்கடி செல்வோருக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையே சுங்க கட்டணம் தான். சாலை வரி கட்டும்போது எதுக்குப்பா தனியாக டோல் கட்டணம் என்பதே பலருக்கும் இருக்கம் கேள்வி. ஒவ்வொரு முறையும் இது தொடர்பாக பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். இதற்கிடையே வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி தரும் ஒரு அறிவிப்பை நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

டோல் முறை
அதாவது டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அதிகம் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் 40% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய விதிகளின்படி டோல் கட்டணத்தை மாற்றும்படி நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பழைய விதி என்ன?
இதுவரை பாலம், சுரங்கப்பாதை, மேம்பாலம், உயர்மட்ட சாலை போன்ற அதிக செலவில் கட்டப்பட்ட கட்டமைப்புகளுக்கு தனி கணக்கீட்டு முறை பின்பற்றப்பட்டது. இதன் கட்டுமான மற்றும் பராமரிப்பு செலவு சாதாரண சாலைகளை விட அதிகம் என்பதால் இதன் 1 கிலோமீட்டர் நீளம் என்பது டோல் கணக்கீட்டில் 10 கிலோமீட்டராக எடுத்து கொள்ளப்பட்டது. உதாரணமாக, 10 கிமீ உயர்மட்ட சாலை அல்லது மேம்பாலம் இருந்தால், டோல் கணக்கீட்டில் அது 100 கி.மீ. கருதப்படும். அதை வைத்து டோல் கட்டணம் கணக்கிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய விதி என்ன?
இந்த விதிகளில் தான் இப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, கட்டமைப்பின் நீளத்தின் 10 மடங்கு அல்லது மொத்த நெடுஞ்சாலை திட்ட நீளத்தின் 5 மடங்கு- இதில் எது குறைவோ அதை தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும். மேலும், 60 மீட்டருக்கு குறைவான பாலங்கள் அல்லது கட்டமைப்புகளுக்கு தனி கணக்கீடு எதுவும் இல்லை.
உதாரணமாக ஒரு நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நீளம் 50 கிமீ என வைத்துக் கொள்வோம். அதில் மேம்பாலம், பாலம், சுரங்கப்பாதை எல்லாம் சேர்த்து 25 கிமீ வருகிறது என வைத்துக்கொள்வோம். பழைய விதியின்படி 25 + (25 × 10) = 275 கிலோமீட்டருக்கு டோல் வசூலிக்கப்பட்டது. ஆனால், புதிய விதிகளின்படி இந்த கட்டணம் கணிசமாக குறையும்!
பலனை கொடுக்கும்
நீண்ட சுரங்கப்பாதைகள், பாலங்கள், நகர்ப்புற உயர்மட்ட சாலைகள் போன்ற அதிக செலவில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இது மிக பெரியளவில் பலனை கொடுக்கும். பொதுவாக சுங்க கட்டணம் என்பது தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க செலவாகும் மிக பெரிய கட்டுமான செலவை மீட்டெடுக்கவே வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய முறை பொதுமக்களின் சுமையை குறைக்கும் என்று நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
