வேலையே இல்லாமல் ஏன் வெளியே வர்றாங்க.. ம.பி டிராபிக் வழக்கில் ஹைவே ஆணையம் வைத்த வினோத வாதம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் - தேவாஸ் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வாகனங்கள் முன்பின் செல்ல முடியாமல் 40 மணி நேரத்துக்கு 8 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, வேலையே இல்லாமல் அதிகாலையிலேயே ஏன் வெளியே வர்றாங்க என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு வாதம் வைத்தது பேசுபொருளாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தூர் தேவாஸ் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று சர்வீஸ் சாலையிலும் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் வியாழக்கிழமை அன்று அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் முன்னும் பின்னும் நகர முடியமால் நின்றன.

சுமார் 4 ஆயிரம் வாகனங்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டன. போக்குவரத்து நெரிசலின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன நெரிசலில் சிக்கி தவித்த பயணிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த போக்குவரத்து நெரிசல் சம்பவம் அதிகம் கவனம் பெற்றது.
எந்த வேலையும் இல்லாத மக்கள்
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். வாதத்தின் போது ஹைவே ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "எந்த வேலையும் இல்லாத போதும் மக்கள் ஏன் இவ்வளவு சீக்கிரமாக வீட்டை விட்டு கிளம்ப வேண்டும்" என்று கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்னும் பணியை முடிக்கவில்லையா?
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் பினோத் குமார் திவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், மத்திய அரசு, மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் மாற்றுப்பாதையை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடந்த ஆண்டே உத்தரவிட்டதையும் கவனத்தில் எடுத்த இந்தூர் உயர் நீதிமன்றம், ஜூன் 2025 ஆகியும் இன்னமும் பணியை முடிக்கவில்லை என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.












Click it and Unblock the Notifications