பட்ஜெட்டில் ‛புது ரெக்கார்ட்’.. மன்மோகன் சிங், ப சிதம்பரம் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 31ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் அன்றைய தினம் நிர்மலா சீதாராமன் 3 முக்கிய சாதனைகளை நிகழ்த்த உள்ளார்.
குறிப்பாக அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர்களான அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை முறியடிப்பதோடு, முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்ய உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

நிர்மலா சீதாராமன் நிகழ்த்த போகும் இந்த சாதனை எதன் அடிப்படையில் அமைய உள்ளது என்பது பற்றிய விரிவான தகவல் வருமாறு: பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
நிர்மலா சீதாராமன் சாதனை: அதன்படி நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டில் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ளதால் 2024ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் ஒரு நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் தான் நிர்மலா சீதாராமன் 3 முக்கிய சாதனைகளை எட்ட உள்ளார்.
முதல் சாதனை: இந்தியாவில் இப்போது வரை நிதி அமைச்சராக ஒருவர் 6 பட்ஜெட்டை இடைவெளியின்றி தொடர்ந்து தாக்கல் செய்த நபர் என்றால் அது முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் தான். இவர் 1959ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு யாரும் இவரது சாதனையை தொடவில்லை. இத்தகைய சூழலில் தான் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்ய உள்ளார்.
2வது சாதனை: இதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர்களாக முன்னாள் பிரதமர் மன்கேமாகன் சிங், யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். தற்போது நிர்மலா சீதாராமன் 6வது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்வதால் இவர்களின் 4 பேர் சாதனையை முறியடிக்க போகிறார்.
3வது சாதனை: இந்தியாவை பொறுத்தமட்டில் இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மத்திய நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால் யாரும் பெண் ஒருவர் முழுநேர மத்திய நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது இல்லை. இந்த சாதனைக்கு ஏற்கனவே நிர்மலா சீதாராமன் சொந்தக்காரராக உள்ள நிலையில் மத்திய பெண் நிதி அமைச்சராக அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெயரையும் அவர் தொடர்ந்து தக்க வைக்க உள்ளார். இது அவரது 3வது சாதனையாக அமைய உள்ளது.












Click it and Unblock the Notifications