போராட்டத்தை முடிக்க 3 பேர் குழு.. விவசாயிகள் வருமானத்தை உயர்த்த மோடி நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
டெல்லி: தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி விவசாயிகள் டெல்லி நோக்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், போராட்டம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
போராட்டம்: கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்து வந்து, போராட்டத்தை தொடங்கினர். தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், இதேபோன்ற போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி அவர்கள் அணி வகுக்க தொடங்கியுள்ளனர்.

கோரிக்கைகள்: விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த போராட்டங்கள் தங்களின் வாக்கு வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது. மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு இந்த பேச்சுவார்ததையை நடத்தி வருகிறது. இதுவரை 4 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், 5ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?: ஆனால், தொடர் பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு காலத்தை வீணடிப்பதாக விவசா சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நாடாளுமன்றத்தின் அவையை உடனே கூட்டி, அதில் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல தங்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் ஹரியான போலீஸ் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்: இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது, “மத்திய அரசு 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறு குறு விவசாயிகள் தொடங்கி அனைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது யூரியாவின் விலை ரூ.300லிருந்து ரூ.3000ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் ரூ.300க்குதான் விவசாயிகள் யூரியாவை வாங்குகின்றனர். காரணம் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான். விவசாயிகள் பிரச்சனைகளில் நாங்கள் உண்மையாக செயல்பட்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கும் நிலையில், நிர்மலா சீதாராமனின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications