சொந்தமாக கார் - வீடு இல்லை.. மனைவியை விட குறைந்த வருமானம்.. கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு இதுதான்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமாக கார், வீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கெஜ்ரிவாலின் ஆண்டு வருமானம் என்பது அவரது மனைவி சுனிதாவின் வருமானத்தை விட குறைந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நியூடெல்லி தொகுதியில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் அனுமன் மற்றும் வால்மிகி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
தரிசனத்துக்கு பிறகு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு விபரங்கள் உள்ளன. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு வெறும் ரூ.1.73 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது ஆண்டு வருமானம் என்பது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது அவரது ஆண்டு வருமானம் ரூ.44.90 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது ஆண்டு வருமானம் ரூ.7.21 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கெஜ்ரிவாலிடம் ரூ.3.46 லட்சத்துக்கு அசையும் சொத்து உள்ளது. இதில் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.96 லட்சம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை அடங்கும். அதேபோல் அசையா சொத்தாக காசியாபாத்தில் ரூ.1.7 கோடி மதிப்பிலான பிளாட் உள்ளது. இதுதவிர வருங்கால வைப்பு நிதி, பங்குகள், மியூட்சுவல் பண்ட்ஸ், இன்சூரன்ஸ் பாலிசி என எதுவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இல்லை. அதேபோல் அவரிடம் சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதேவேளையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது சொத்து மதிப்பு ரூ.2.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1 கோடி ரொக்கம், ரூ.25 லட்சம் மதிப்பிலான 320 கிராம் தங்க நகைகள், ரூ.92 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் அடங்கும். சுனிதாவிடம் அசையா சொத்தாக ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடு குர்கிராமில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு சொந்தமாக கார் இல்லை. ஆனால் சுனிதாவிடம் 2017 மாடலில் மாருதி பாலினோ கார் உள்ளது. அதேபோல் சுனிதாவின் ஆண்டு வருமானம் என்பது ரூ.14.10 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவாலை விட அவரது மனைவி சுனிதாவின் ஆண்டு வருமானம் என்பது அதிகமாகும்.
அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2013ம் ஆண்டில் முதல் முறையாக நியூடெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மறைந்த முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்சித்தை வீழ்த்தினார். அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். இப்போது 4வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நியூடெல்லி தொகுதியில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications