தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் மசோதா! மத்திய அரசு ஷாக் முடிவு
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் மசோதா இன்று ராஜ்ய சபாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா கடுமையான விவாதங்களை சந்தித்து உள்ளது.
இந்தியாவில் மிகவும் உயரிய அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையமும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் சட்ட சபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்களை தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது. தேர்தலை அறிவிப்பது தொடர்ந்து முடிவுகளை அறிவித்து, வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது வரை அனைத்தையும் தேர்தல் ஆணையமே செய்கிறது.

இத்தனை காலம் மத்திய அரசுதான் நேரடியாக தேர்தல் ஆணையர் நியமனத்தில் முடிவுகளை எடுத்தது. தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு சார்பாக நடத்தப்படுவதாக அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு: இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அதில், அதன்படி மத்திய அமைச்சரவை பரிந்துரையின்படி தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய கூடாது.
இனிமேல் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான சட்ட விதிகளை வழிவகுக்க வேண்டும். அதுவரை இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான பெஞ்ச், தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில்தான் இதை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு பிளான்: அதன்படி தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கும் மசோதா இன்று ராஜ்ய சபாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா கடுமையான விவாதங்களை சந்தித்து உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்த மசோதாவை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்துகிறது. இந்த மசோதாவின்படி, இனி வரும் காலங்களில் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.
இந்த தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியோ அல்லது வேறு நீதிபதியோ இடம்பெற மாட்டார்கள். மாறாக, (அ) பிரதமர்- தேர்வுக்குழு தலைவர்; (b) எதிர்க்கட்சித் தலைவர் - தேர்வுகுழ உறுப்பினர்; (c) மத்திய அமைச்சர் - தேர்வுக்குழு உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் அடங்கிய குழுதான் இனி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்.
அவர்களின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்பார். இதற்கான சட்ட திருத்த மசோதா Chief Election Commissioner and other Election Commissioners (Appointment Conditions of Service and Term of Office) Bill, 2023 என்ற பெயரில் இன்று ராஜ்ய சபாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டெல்லி மசோதா: முன்னதாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. எனினும், உச்ச நீதிமன்றம் உத்தரவு வெளியான உடனேயே, இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் அதன் மசோதா முன்பு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக செயல்பட்ட மத்திய அரசு மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications