வெஜ் பிரியாணிக்கு பதில் நான்-வெஜ் பிரியாணி கொடுத்த ரெஸ்டாரண்ட் ஊழியர் போலீஸ் கஸ்டடியில்! என்ன காரணம்
லக்னோ: இப்போது நமது நாட்டில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக நவராத்திரி பண்டிகையின் போது பலரும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். இதற்கிடையே நவராத்திரி சமயத்தில் பெண் ஒருவர் வெஜ் பிரியாணியை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு நான் வெஜ் பிரியாணி வந்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் இப்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கி இன்று ஏப்ரல் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படும். மேலும், பொதுவாக நவராத்திரி சமயத்தில் விரதம் இருந்து கடவுள்களை வழிபடுவார்கள்.

நவராத்திரி
இதற்கிடையே நொய்டாவில் நவராத்திரி பண்டிகையின் போது பெண் ஒருவருக்கு வெஜ் பிரியாணிக்குப் பதிலாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் மீது உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
நொய்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலியில் தான் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தனக்கு வெஜ் பிரியாணிக்குப் பதிலாக சிக்கன் பிரியாணியை அவர்கள் டெலிவரி செய்துவிட்டார்கள் என்று அந்த பெண் சமூக வலைத்தளத்தில் போட்டோவை பகிர்ந்து குற்றஞ்சாட்டியுள்ளார்.. கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கவே முடியாது
சாயா சர்மா என்ற பெண் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். நவராத்திரி பண்டிகையின் போது, பல இந்துக்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் நிலையில், அந்த ஹோட்டல் வேண்டுமென்றே தனக்கு சிக்கன் பிரியாணியை அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அவர், "நான் சுத்த சைவம். ஆனால், எனக்கு சிக்கன் பிரியாணி கொடுத்துள்ளனர். நான் 2 ஸ்பூன் சாப்பிட்ட பிறகே அதில் இறைச்சி இருந்ததைக் கவனித்தேன். இதை என்னால் ஏற்கவே முடியாது" என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள "லக்னவி கபாப் பராத்தா" என்ற உணவகத்தில் இருந்து வெஜ் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், ஆனால் தனக்கு சிக்கன் பிரியாணி வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகாரளிக்கத் தொடர்பு கொண்ட போது, ஹோட்டல் மூடப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்டார். அவரது வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆனது.
நெட்டிசன்கள்
வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நான் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது மிக பெரிய பிழை என்றும் பண்டிகைக் காலங்களில் ஹோட்டல் நிர்வாகத்தினர் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என ஒரு சில நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் நவராத்திரியின் போது வெளியே ஆர்டர் செய்தது ஏன் என்றும் அதுவும் அசைவ உணவகத்தில் இருந்து உணவு ஆர்டர் செய்தது ஏன் என்றும் அந்த பெண்ணையே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
போலீசார் வழக்குப்பதிவு
அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், உத்தரப் பிரதேச போலீசார் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளனர். இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் மீது உத்தரப் பிரதேச போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
