NSE சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி - மர்மங்கள் வெளிவருமா
தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டார்.

இந்த கால கட்டத்தில் இமயமலையில் வசித்த சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டிய கணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சித்ராவின் பதவிக் காலத்தில் சாமியார்தான் தேசிய பங்குச் சந்தையின் தலைமை அதிகாரிபோல் செயல்பட்டதாகவும், சித்ரா அவரின் பொம்மையாக இருந்தார் எனவும் செபி (SEBI)குற்றம் சாட்டியிருந்தது.
சாமியார் ஆலோசனைப்படி ஆனந்த் சுப்பிரமணியனை தலைமை திட்ட ஆலோசகராக நியமித்து அவருக்கு பலமுறை ஊதிய உயர்வு வழங்கினார் சித்ரா ராமகிருஷ்ணா என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக செபி தரப்பில் ரூ. 3 கோடி அபராதமும், பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது.
இதனிடையே, ஆனந்த் சுப்பிரமணியம் சிபிஐ அதிகாரிகளால் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவை நேற்று இரவு டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் சிபிஐ கைது செய்தது. சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐக்கு அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications