நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்வது எப்படி
டெல்லி: மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகின. மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளாகவே ஆன் லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இடையில் சில காலம் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், 2ஆம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

கொரோனா 2ஆம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்ததால், நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், +2 மாணவர்களுக்கு 10,11 வகுப்பு தேர்வுகள் மற்றும் +2 பருவ தேர்வுகளில் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இதனால் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். அதேநேரம் நீட் ஒரே ஒரு தேர்வு தான் என்பதால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் ஒரு சாரர் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது
இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 16.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில், மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இரண்டு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓஎம்ஆர் தாள்கள் மாறியுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்ற தடை விதித்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் நீட் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடடுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அனைத்து மாணவர்களின் மின்னஞ்சல்களுக்கு நீட் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இதன் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications