அடுத்தடுத்து புகார்.. வரும் ஜூலை 19ல் 'க்யூட்’ மறுதேர்வு.. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!
டெல்லி: இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, க்யூட் நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் சிலர் புகார் தெரிவித்த நிலையில், வரும் ஞாயிறன்று மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கான, க்யூட் நுழைவுத் தேர்வு, கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்டது. இதில், 13.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

சில பாடங்களுக்கு நேரடியாகவும், சில பாடங்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் க்யூட் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் சில பாடங்களில், குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வை முடிப்பதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் க்யூட் நுழைவுத்தேர்வு நடந்த நிலையில் ஜூலை 7 ஆம் தேதி உத்தேச விடைக்குறிப்புகள், அதாவது ஆன்சர் கீ வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் இது தொடர்பாக தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என்றும், புகார்களில் உண்மைத்தன்மை இருந்தால் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் என்.டி.ஏ தெரிவித்தது.
இதையடுத்து, வரும் ஜூலை 19 ஆம் தேதி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 'க்யூட்' மறு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கு பதிலாக வேறு மொழியில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நேர இழப்பு காரணமாக மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி எனப்படும் பல்கலை மானியக்குழுவின் நெட் தேர்வுகளில் மோசடிகள், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 1,563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் க்யூட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications