ஜென்சன் கள்ள உறவு.. என்விடியாவுக்கு மட்டும் ஆபத்து இல்லை.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் சர்வ நாசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் மிக பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், தற்போது சீன உளவு ஆபரேஷனில் சிக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் சர்வதேச தொழில்நுட்ப துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சீன தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் அவருக்கு திருமணத்துக்கு மீறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணுக்கு சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருந்ததாக எழுந்த தகவலே இப்போது சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆலிஸ் ஹுவாங் சிங்கப்பூரை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான மெகாஸ்பீட் இன்டர்நேஷனலுடன் தொடர்புடையவர். அந்த நிறுவனம் அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி என்விடியாவின் மேம்பட்ட ஏஐ சிப்களை சீனாவுக்கு கொண்டு செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க அரசு இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

Nvidia in Crisis

சீனா

மெகாஸ்பீட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளில் நிறுவனங்களின் நெட்வொர்க்கை உருவாக்கி என்விடியா சிப்களை வாங்கியுள்ளனர். அமெரிக்க கட்டுப்பாடுகளால் சில சிப்களின் விநியோகம் தடைப்பட்டபோது, தங்களது தொடர்புகளை பயன்படுத்தி அமெரிக்காவின் தடையை மீறி வாங்கியுள்ளனர். இதன் மூலம் H100, H200, A100 ரக என்விடியா சிப்கள் குறைந்தது 7.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தி இன்ஃபர்மேஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே ஜென்சன் வெளிநாட்டு உளவு நடவடிக்கை மூலம் குறிவைக்கப்பட்டாரா என்பதை விசாரிக்க முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜூன் எச். கிம்மை என்விடியா இயக்குநர் குழு நியமித்துள்ளது. அதேநேரம் என்விடியாவின் வர்த்தக ரகசியங்களோ, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நலன்களோ இதில் பாதிக்கப்படவில்லை என்று என்விடியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

3 கேள்விகள்

ஆனால், இந்த சர்ச்சை என்விடியாவின் எதிர்காலம் குறித்த மூன்று முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜென்சன் ஹுவாங் பதவியிலிருந்து விலகினால் என்ன நடக்கும்? ஏஐ நெட்வொர்க்கை உருவாக்குவதில் என்விடியா செய்துள்ள பிரம்மாண்ட முதலீடுகள் எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்? ஒருவேளை என்விடியா தடுமாறினால் ஒட்டுமொத்த ஏஐ துறைக்கும் என்ன பாதிப்பு ஏற்படும்? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

1. ஜென்சன் ஹுவாங் இல்லாமல் என்விடியா இயங்குமா?

கடந்த அக்டோபர் 6ம் தேதி 239 டாலராக இருந்த என்விடியா பங்கு விலை, நவம்பர் 10ம் தேதி 169 டாலராக குறைந்துள்ளது. இது சுமார் 29 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த 24 நாட்களில் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 1.46 லட்சம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏஐ பங்குகள் மீதான பொதுவான முதலீட்டாளர் அச்சமும் ஒரு காரணம் என்றாலும், ஹுவாங் விவகாரம் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

ஹுவாங் என்விடியாவில் சுமார் 3.5 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மார்க் ஜுக்கர்பெர்க், எலான் மஸ்க் போன்றவர்கள் தங்கள் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஜென்சனுக்கு அதுபோல நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் சிறப்பு வாக்குரிமைகள் அவரிடம் இல்லை. எனவே, அவரது செயல்பாடுகள் நிறுவனத்தின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இயக்குநர் குழு கருதினால், அவரை பதவியிலிருந்து நீக்க முடியும்.

ஆனால், அவருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பதுதான் பெரிய சவால். 1993ல் நிறுவனத்தை இணைந்து தொடங்கிய ஜென்சன் ஹுவாங், 30 ஆண்டுகளுக்கு மேலாக அதன் தலைவராக இருந்து வருகிறார். சாதாரண கிராபிக்ஸ் சிப் தயாரிப்பு நிறுவனமாக இருந்த என்விடியாவை, உலக ஏஐ புரட்சியின் முக்கிய சக்தியாக மாற்றியவர் அவர்தான்.

தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், உலக நாடுகள் என பல தரப்பினருடனும் அவர் உருவாக்கியுள்ள உறவுகள் என்விடியாவுக்கு முக்கியமானவை. குறிப்பாக அமெரிக்க அரசில் அவரது செல்வாக்கு அதிகம். சீனாவுக்கான மேம்பட்ட சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அமெரிக்க அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், நிறுவனத்தின் பெரும்பாலான மூத்த அதிகாரிகள் நேரடியாக ஜென்சன் ஹுவாங்கிடம் அறிக்கை அளிக்கும் வகையில் எளிமையான நிர்வாக அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.

ஜென்சனை போல இன்னொருவர் கிடைப்பது கடினம் என்றாலும் இப்போது தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் கொலெட் கிரெஸ் ஒரு ஆப்ஷனாக இருக்கிறார். அதேபோல தொழில்நுட்பப் பிரிவில் அனுபவம் வாய்ந்த இயன் பக் மற்றொரு ஆப்ஷன். முன்னாள் என்விடியா அதிகாரியும், தற்போது ஆர்ம் நிறுவனத்தின் சிஇஓவுமான ரெனே ஹாஸும் பெயரும அடிபடுகிறது. ஜென்சன் நீக்கப்பட்டால் இவர்களில் ஒருவர் என்விடியாவுக்கு தலைமை தாங்குவார்கள். ஆனால், ஜென்சனின் தொழில்நுட்ப அறிவு, பிஸ்னஸ் மைண்ட், அரசியல் செல்வாக்கு ஆகிய அனைத்தையும் ஒரே நபரால் உடனடியாக ஈடுசெய்ய முடியுமா என்பதே கேள்வி.

2. ஏஐ முதலீடுகளில் என்விடியாவுக்கு இருக்கும் ஆபத்து என்ன?

முன்பு என்விடியா சிப்களை வடிவமைத்து விற்பனை செய்யும் நிறுவனமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஏஐ நிறுவனங்களில் முதலீடு செய்வது, டேட்டா சென்டர்களுக்கு நிதியுதவி அளிப்பது, எதிர்கால சிப் தயாரிப்புக்குத் தேவையான உற்பத்தி திறனை முன்கூட்டியே உறுதி செய்வது என அதன் பிஸ்னஸ் விரிவடைந்துள்ளது.

2026 ஜூலை நிலவரப்படி, என்விடியா சுமார் 99 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை செய்துள்ளது. மேலும் 25 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிமொழிகளை கொடுத்திருந்தது. இதை தவிர எதிர்கால சிப் தயாரிப்புக்கான உற்பத்தி மற்றும் மெமரி வசதிகளை உறுதி செய்ய 279 பில்லியன் டாலர் அளவிலான சப்ளை மற்றும் உற்பத்தி திறன் ஒப்பந்தங்களும் உள்ளன. கிளவுட் சேவை ஒப்பந்தங்கள் மட்டும் 29 பில்லியன் டாலர் மதிப்புடையவை. மேலும், ஓபன்ஏஐ பயன்படுத்த உள்ள ஓஹியோவின் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திட்டத்துக்கு 105 பில்லியன் டாலர் வரையிலான உத்தரவாதங்களை வழங்கவும் என்விடியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதில் ஒரு முக்கியமான ஆபத்து உள்ளது. ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க ஒரு கிளவுட் நிறுவனம் பல பில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தில் என்விடியா முதலீடு செய்கிறது செய்கிறது. கிடைக்கும் பணத்தை அந்த நிறுவனம் மீண்டும் என்விடியாவின் சிப்களை வாங்க பயன்படுத்துகிறது. இதனால் என்விடியாவின் வருவாய் அதிகரிக்கிறது.

இப்படியான பணப்புழக்கத்தை சுற்றி ஒரு விவாதம் எழுந்துள்ளது. இது ஒரே பணம் நிறுவனங்களுக்குள் சுற்றி செல்லும் செயற்கையான தேவையை உருவாக்குகிறதா என்று கேள்வியை முதலீட்டாளர் மைக்கேல் பர்ரி உள்ளிட்டோர் எழுப்பியுள்ளனர். ஆனால், இதை வைத்து மட்டுமே மோசடி நடக்கிறது என்று முடிவெடுக்க முடியாது. ஆனால், ஏஐ நிறுவனங்கள் தாங்கள் அமைக்கும் கட்டமைப்புகளை பயன்படுத்தி உண்மையில் லாபம் ஈட்ட முடியுமா என்பதில் தான் என்விடியாவின் எதிர்காலமும் சார்ந்துள்ளது.

3. என்விடியா தடுமாறினால் ஏஐ உலகுக்கு என்ன நடக்கும்?

உலகின் பெரும்பாலான ஏஐ கட்டமைப்புகள் என்விடியாவின் ஜிபியு சிப்களை சார்ந்தே இயங்குகின்றன. ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வரை பலரும் என்விடியாவின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு தங்கள் திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.

எனவே என்டிவியாவில் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது விநியோக தடைகள் என நீண்டகாலம் நீடித்தால், ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். கிளவுட் நிறுவனங்கள் டேட்டா சென்டர் விரிவாக்க திட்டங்களை மறுபரிசீலனை செய்யலாம். டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கு புதிய முதலீடுகளை திரட்டுவதும் கடினமாகலாம்.

அதேநேரம் என்விடியா நிறுவனத்தை மட்டும் சார்ந்திருப்பதை குறைக்க உலக நிறுவனங்கள் மாற்று வழிகளையும் தேடி வருகின்றன. அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஹுவாவே போன்ற உள்நாட்டு சிப் நிறுவனங்களை அதிகம் நம்ப சீனா தொடங்கியுள்ளது. டீப்சீக் R1 போன்ற சீன ஏஐ மாடல்கள், குறைந்த கம்யூட்டர் திறனை பயன்படுத்தியும் சில ஏஐ டாஸ்குகளை செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

AMD, பிராட்காம் போன்ற நிறுவனங்களின் சிப்கள் மீதும் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரே சிப் நிறுவனத்தை முழுமையாகச் சார்ந்திருக்காமல் தங்களது கட்டமைப்பை பன்முகப்படுத்த விரும்புகின்றன. இருப்பினும், என்விடியாவின் ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்று கூற முடியாது. அதன் CUDA சாப்ட்வேர் சூழல், சிப்கள் மற்றும் நெட்வொர்க்கிங் ஆகியவை முன்னணியில் உள்ளன. ஹுவாங் விலகினாலும் நிறுவனத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் அதிகாரிகள் என்விடியாவில் உள்ளனர்.

ஆபத்து

ஆனால், இந்த சர்ச்சை ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் ஏஐ வளர்ச்சி என்பது சில நிறுவனங்களை, குறிப்பாக என்விடியாவையும், அதன் தலைவரான ஜென்சன் ஹுவாங்கையும் அளவுக்கு அதிகமாக சார்ந்திருக்கிறது. எனவே, கேள்வி ஜென்சன் ஹுவாங் பதவியில் நீடிப்பாரா என்பது மட்டுமல்ல. ஒரு சில நிறுவனங்களை சார்ந்தே உலகின் ஏஐ எதிர்காலம் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதும்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+