நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள்.. 2ஆம் இடத்திற்கு வந்த நவீன் பட்நாயக்! கருணாநிதி, ஜெயலலிதா எங்கே
டெல்லி: நாட்டிலேயே அதிக நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர் என்றால் அவர் மாநில முதல்வர்கள் தான். நாட்டிற்கான பிரதமர் இருந்தாலும் மாநிலத்தின் ஒட்டுமொத்த கண்டிரோலும் மாநில முதல்வர்களிடமே இருக்கும்.

மாநிலத்தில் ஒருவர் செல்வாக்கு பெற்றால் அவர் முதல்வர் பதவியில் நீண்ட காலம் இருப்பார். அதன்படி இப்போது நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்தவர்கள் பட்டியலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இப்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். 5 முறை முதல்வரான பட்நாயக் 2000ஆவது ஆண்டு மார்ச் மாதம் முதல்வரான அவர், 23 ஆண்டுகள் 139 நாட்களாக முதல்வர் பதவியில் இருக்கிறார்.
இரண்டாம் இடம்: மேற்கு வங்கா முதல்வராக இருந்த சிபிஎம் கட்சியின் ஜோதிபாசு இத்தனை காலம் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், இவரை நவீன் பட்நாயக் நேற்றைய தினம் ஓவர்டேக் செய்தார். ஜோதிபாசு 1977 முதல் 2000 வரை 23 ஆண்டுகள் 138 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். கடந்த டிசம்பர் 12, 1994இல் முதல்வராகப் பொறுப்பேற்ற அவர், மே 27, 2019 வரை, அதாவது 24 ஆண்டுகள் 166 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தார்.
இந்த இரண்டு தலைவர்களுக்கும் பிறகு ஒரு மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை தொடர்ந்து பதவியேற்ற மூன்றாவது தலைவராக பட்நாயக் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடம் யாருக்கு: இந்தப் பட்டியலில் அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் 4ஆவது இடத்தில் இருக்கிறார். 1980- 1999, 2003-2007 என அவர் மொத்தம் 22 ஆண்டுகள் 250 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார். அடுத்து மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் லால் தன்ஹாவ்லா 1984- 1986, 1989-1998, 2008-2018 என்று மொத்தம் 22 ஆண்டுகள் 60 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் வீரபத்ர சிங் (21 ஆண்டுகள் 13 நாட்கள்) திரிபுராவின் மாணிக் சர்க்கார் (19 ஆண்டுகள் 363 நாட்கள்) ஆகியோர் முறை 6 மற்றும் 7ஆவது இடத்தில் உள்ளனர்.

தமிழக தலைவர்கள்: இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 3 முதல்வர் டாப் 50இல் உள்ளனர். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 8ஆவது இடத்தில் இருக்கிறார். 1969-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 என அவர் மொத்தம் 18 ஆண்டுகள் 362 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்தப் பட்டியலில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 24ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக 14 ஆண்டுகள் 127 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார். அதேபோல அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இதில் 43ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் 10 ஆண்டுகள் 65 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications