சமஸ்கிருதத்திற்கு வரிப்பணத்தை எதுக்கு வேஸ்ட் பண்றீங்க? - தயாநிதி மாறன்! ஓம் பிர்லா பதிலை பாருங்க
டெல்லி: நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் பேசுவது மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்த வகையில் இனி சமஸ்கிருதம் உட்பட 18 மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இதற்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாறனின் கண்டனத்திற்கு டென்ஷன் ஆன ஓம் பிர்லா, சற்று காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்த விவாதம் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

கேள்வி நேரத்தின் போது, ஓம் பிர்லா மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். "நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்கள், பேசப்படும் உரை குறித்து ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் மொழி பெயர்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தமிழ், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்பூரி, சமஸ்கிருதம் மற்றும் உருது என கூடுதலாக 6 மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இனி உரைகளும், விவாதங்களும் கூடுதலாக இந்த 6 மொழிகளிலும் கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.
அவரது அறிவிப்புக்கு தயாநிதி மாறன் கண்டனம் முழங்கினார். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டிய மாறன், வெறும் 73,000 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்காக எதற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்? ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு ஏன் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சற்று காட்டமாக பதிலளித்த ஓம் பிர்லா, "இது பாரதம். இதன் முதன் மொழி சமஸ்கிருதம். நான் 22 மொழிகளை சொன்னேன். ஆனால் நீங்கள் ஏன் சமஸ்கிருதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்? எல்லா மொழிகளை போல இந்தியிலும் மொழிபெயர்க்கப்படும்" என்று கூறினார். சபாநாயகரின் இந்த பதில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் இரும்பு அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மக்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழ்ந்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படியெனில், இந்தியாவின் மூத்த குடி தமிழனாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அப்பேற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய தமிழ் மொழியை நாட்டின் முதன்மை மொழி என்று கூறாமல், சமஸ்கிருதத்தை நாட்டின் முதன்மை மொழி என சபாநாயகர் குறிப்பிட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications