"தலை முடியை பிடித்து இழுத்து.." காங். இளைஞரணி தலைவரை.. தரதரவென இழுத்து சென்ற போலீஸ்! பரபர வீடியோ
டெல்லி: தலைநகர் டெல்லியில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில், காங்கிரஸ் இளைஞரணி தலைவர் நடத்தப்பட்ட விதம் குறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு வழக்கு காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்து வருகிறது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை சுதந்திரப் போராட்ட சமயத்தில் நேரு தொடங்கி இருந்தார்.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், கடந்த 2010இல் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.

விசாரணை
யங் இந்தியா நிறுவனத்தில் சுமார் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்த நிலையில், இது சர்ச்சையானது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கும் தொடர்ந்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை இந்த அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

ராகுல் காந்தி
அப்போது சோனியா காந்திக்கு கொரோனா இருந்ததால் ராகுல் காந்தி மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். ராகுல் காந்தியிடம் 5 நாட்களில் மொத்தம் 50 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்த சோனியா காந்தி கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார். இந்தச் சூழலில் இரண்டாம் நாளாக இன்றும் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.

சோனியா காந்தி
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பி.வி.சீனிவாசனிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.வி. சீனிவாஸின் தலைமுடியைப் பிடித்து இழுத்து போலீசார் அவரை இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்
போலீசார் தன்னை அடித்ததாகவும் தலைமுடியைப் பிடித்து இழுத்ததாகவும் சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார். இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில் ஒரு காவலர் அவரது தலைமுடியை இழுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஒரு காவலர் சீனிவாசனை ஆவேசமாக காருக்குள் தள்ளுவதும் தெரிகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் பகிர்ந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்
ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தை டெல்லி போலீசார் ஒடுக்க முயல்வதாகவும் அவர்கள் சாடி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சம்மந்தப்பட்ட போலீசார் அடையாளம் காணப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு
சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தின் அருகே உள்ள முக்கிய சாலை அருகே காங்கிரஸ் தலைவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications