மாணவர்கள் போராட்டத்தால் குலுங்கும் பாஜக! விரைந்த நட்டா! வந்தது தனியார் ராணுவம்? அகிலேஷ் வீசிய குண்டு
டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி நேற்றைய தினம் நடத்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் எடுத்த நடவடிக்கைகளை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் லீக் விவகாரத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க மறுப்பதாக சாடிய அவர், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க தனியார் ராணுவம் களமிறக்கப்பட்டதாகவும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
நீட் வினாத்தாள் லீக் விஷயத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும், அப்போது போராட்டக்காரர்களைக் கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

அகிலேஷ் யாதவ்
இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தை டெல்லி போலீசும் மத்திய அரசும் கையாண்ட விதத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பேற்க மறுப்பதாகவும் போராட்டக்காரர்களை தாக்க போலீசாருடன் தனியார் ராணுவத்தை பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், "வினாத்தாள் லீக் ஆகாமல் இருப்பதை தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதுதான் நீங்கள் சொல்லும் அனைவருக்குமான வளர்ச்சியா? இதுதான் நீங்கள் சொல்லும் நல்ல காலமா?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தனியார் ராணுவம்?
மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னும் பதவி விலகாதது குறித்தும் அவர் விமர்சித்தார்.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் பல ரகசியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால் தான் அவரை பதவியில் வைத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். காவலர்கள் மட்டுமின்றி போராட்டக்காரர்கள் மீது சாதாரண உடையில் இருந்த சிலரும் தாக்குதல் நடத்தியதாக அகிலேஷ் யாதவ் சாடினார்.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பரவும் வீடியோக்களை குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், "சுதந்திர இந்தியாவில் ஒரு அரசு இப்படியும் நடந்து கொள்ளும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஹிட்லர் தனது சொந்த மக்களுக்கு எதிராக தனியார் படையை உருவாக்கி வைத்திருந்தார். நேற்று டெல்லியில் சாதாரண உடையில் இருந்த பலர் மாணவர்களை தாக்கியதை பார்த்தோம். அது ஹிட்லரை தான் நமக்கு நினைவுபடுத்துகிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.
ஜேபி நட்டா
இதற்கிடையில் போராட்டத்தில் காயமடைந்தவர்கள் இப்போது டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களின் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த போராட்டக்காரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
விடிய விடிய போராட்டம்
இது ஒரு பக்கம் இருக்க தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர். ஜந்தர் மந்தரில் அவர்கள் அமைத்திருந்த மேடையை டெல்லி போலீசார் நேற்று மாலை அகற்றிய நிலையில், இரவு மீண்டும் தற்காலிக பந்தல் அமைத்து போராட்டத்தில் இறங்கினர். விடிய விடிய அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
