2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்.. 22 மாநிலங்களுக்கு அதிர்ச்சி? தமிழகத்திலும் கூட ஆட்சி காலம் குறையும்!
டெல்லி: மத்திய பாஜக அரசு இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒருவேளை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது எப்படி செயல்படுத்தப்படும். எந்த மாநிலங்களுக்கு இதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ONOE - 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் 2029 லோக்சபா தேர்தலுடன் அமல்படுத்தப்பட்டால், இந்தியாவின் தேர்தல் சீசனே மொத்தமாக மாறி போகும்! லோக்சபா தேர்தலையும், அனைத்து மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதே இதன் அடிப்படை நோக்கம்.

என்ன நடக்கும்!
ஆனால் இதை செயல்படுத்த பல மாநிலங்களின் தற்போதைய ஆட்சிக்காலத்தை குறைக்கவோ அல்லது சிறப்பு ஏற்பாடுகள் மூலம் மாற்றியமைக்கவோ வேண்டிய நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் 2031 வரை இருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தலோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 2029 உடன் அதாவது 3 ஆண்டுகளில் சட்டசபை பதவிக்காலத்தை முடிக்க வேண்டி இருக்கும்.
அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பதவிக்காலம் 2028 இறுதியில் முடியும். அடுத்த 6 மாதங்கள் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அல்லது வேறு சிறப்பு ஏற்பாட்டை செய்ய வேண்டி இருக்கும். இப்படி பல மாநிலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் அல்லது சட்டசபை பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். இது தான் இருப்பதிலேயே மிக பெரிய சிக்கல்!
இப்போது ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் லோக்சபா தேர்தலோடு தான் நடக்கிறது. இந்த நான்கும் என்டிஏ ஆளும் மாநிலங்களாகும். மற்ற 18 மாநிலங்களுக்கு அதன் சட்டசபை பதவிக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும்.
பிரச்சினை என்ன
இந்த 22ல் 11 மாநிலங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில்.. அதாவது 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்போது, என்டிஏ இந்த மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் கூட, புதிய அரசுகளின் பதவிக்காலம் 2029 உடன் குறைக்கப்படலாம். இருப்பினும், என்டிஏ மாநிலங்கள் என்பதால் அவை ஒப்புக்கொள்ளும். அதேநேரம் அந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் சிக்கல் ஏற்படலாம். புதிதாக வரும் அரசுகள் தங்களது ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைக்க ஒப்புக்கொள்ளாமல் போகலாம்.
யாருக்கு அதிக நஷ்டம்!
கோவா, குஜராத், மணிப்பூர், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் சுமார் 3 ஆண்டுகள் வரை குறைக்கப்படலாம். அதாவது, மக்கள் 5 ஆண்டுகளுக்கான அரசை தேர்ந்தெடுத்தாலும், 2029 லோக்சபா தேர்தலுடன் தேர்தலை நடத்த அந்த சட்டசபைகள் அதற்கு முன்பே கலைக்கப்படலாம். அதேபோல சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை குறைக்கப்படலாம்!
எதிர்க்கட்சி மாநிலங்கள்
இதில் சிக்கலே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் தான். என்டிஏ ஆளும் மாநிலங்கள் கூட தங்கள் தலைமை சொல்வதை கேட்டு, சட்டசபையை முன்கூட்டியே கலைக்க ஒப்புக்கொள்ளலாம். ஆனால், எதிர்க்கட்சி மாநிலங்கள் இதற்கு எளிதாக ஒப்புக்கொள்ளாது. இதுவே பெரிய சிக்கல்! பஞ்சாப் 2027லும், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மிசோரம் மற்றும் தெலங்கானா 2028லும் தேர்தலை சந்திக்க உள்ளன. இங்கு புதிய அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், 2029 லோக்சபா தேர்தலின்போது அவற்றின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் பெரும்பகுதி மீதம் இருக்கும். இங்கு ஆட்சியை கலைக்க வேண்டுமா அல்லது சிறப்பு ஏற்பாடு மூலம் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டுமா என்பது முக்கிய கேள்வியாக இருக்கும்.
அதேநேரம் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 2029 லோக்சபா தேர்தலுடன் மற்ற மாநிலங்களின் தேர்தலை நடத்துவது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அது கற்பனையான ஒன்று" என்று குறிப்பிட்டார். மேலும் அவர், இது அரசியலமைப்புக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது" என்றும் கூறினார்.
என்ன நடக்கலாம்?
2026-2028: மாநிலங்களுக்கு தற்போதைய அட்டவணைப்படி சட்டசபை தேர்தல்களை நடக்கும்.
2027-2028: பல மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்கும்.
ஜனவரி 2029: அதிகபட்சம் 18 சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட வாய்ப்புள்ளது.
2029: லோக்சபா தேர்தலுடன் பல மாநில சட்டசபை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறலாம்.
இருப்பினும், உறுதியாக இது இப்படி தான் நடக்கும் என சொல்ல முடியாது. இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி பல விஷயங்கள் சாதகமாக நடந்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும்!


Click it and Unblock the Notifications
