Online Gaming Bill: ஆன்லைன் கேமிங் மசோதாவுக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல்.. சூதாட்ட செயலிகளுக்கு விரைவில் தடை?
டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்குக் கடுமையான விதிகள், அபராதங்கள், மற்றும் தேவைப்பட்டால் அதுபோன்ற செயலிகளைத் தடை செய்யும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு இந்த மசோதா வழங்குகிறது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
நமது நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இளைஞர்கள் பலரும் இந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள். பலரும் முதலில் சின்ன தொகையை வைத்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பித்தில் பணம் வருவதால் அதீத ஆர்வத்தில் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அதுவே பெரிய பிரச்சினையாகிறது.

ஆன்லைன் சூதாட்டம்
போகப் போக நஷ்டம் பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆனாலும், விட்டதைப் பிடிக்கிறேன்.. விட்டதைப் பிடிக்கிறேன் எனச் சொல்லி மேலும் மேலும் பெரிய தொகையை அதில் போடுகிறார்கள். இதனால் பலரும் தங்கள் சேமிப்பை மொத்தமாக இழக்கிறார்கள். சிலர் கடன் வாங்கியும் கூட இதில் விளையாடுகிறார்கள். கடனைக் கட்ட முடியாத நிலை வந்தால் மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள்.
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வருகிறது. பெட்டிங், பந்தயம் தொடர்பான சூதாட்டத்தை கொண்ட செயலிகளைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதுபோன்ற செயலிகளைக் கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது.
நரேந்திர மோடி அரசு ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. நாட்டின் இளைஞர்களைப் பாதுகாக்கும் நோக்குடன், பந்தயம் அல்லது சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் கேமிங் செயலிகளை புரோமோட் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயலிகளைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்வது இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
பெட்டிங் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கம். இந்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கேமிங் துறையே மாறும். இந்த மசோதா இத்துறைக்குத் தேவையான மேற்பார்வையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்
- பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் கேமிங் தளங்களுக்குக் கடுமையான விதிமுறைகள்.
- அபராதங்கள், மற்றும் செயலிகளைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம்
- பந்தயம் தொடர்பான கேமிங் செயலிகளைப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தத் தடை.
- இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், சமூகத் தீங்கைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம்.
ஏன் முக்கியம்?
கட்டுப்பாடற்ற கேமிங் தளங்களால் மோசமான பாதிப்பு ஏற்படுவதாகப் பலரும் விமர்சித்து வந்தனர். குறிப்பாக இளம் வயதினரிடையே இந்தப் பாதிப்புகள் அதிகம் எனச் சொல்லி வந்தனர். இந்தச் சூழலில் தான் மத்திய அரசு இது தொடர்பான மசோதாவை கொண்டு வந்துள்ளது.
அதேநேரம் இந்த மசோதா கிரிக்கெட் பேன்டசி கேம், ரம்மி கேம் உள்ளிட்டவற்றை வெளிப்படையாகத் தடை செய்யும் வகையில் இல்லை. மாறாக அதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது. மசோதா தாக்கலான பிறகே இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் தெரிய வரும். இருப்பினும், மத்திய அரசுக்கு இந்த மசோதா கூடுதல் அதிகாரத்தைக் கொடுப்பதால் இந்த மசோதா மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications