உலக பயங்கரவாத ஒழிப்பு போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூருக்கு இடம் - ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ‛‛பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதன் மூலம் ஆயுதப்படைகள் நம் நாட்டின் வலிமையை காட்டி உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது'' என்று சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பெருமையாக பேசினார்.
நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தையொட்டி முந்தைய நாள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்த வகையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

சுதந்தி தினத்துக்கு முந்தைய நாள், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஒவ்வொரு இந்தியராலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். இந்த நாட்கள் இந்தியர்களாகிய நமது பெருமையை நமக்கு நினைவூட்டுகின்றன.
பாரத நாடு உலகின் பழமையான குடியரசுகளின் தாயகம். இதனை ‛ஜனநாயகத்தின் தாய்' என்று அழைப்பது பொருத்தமானது. நாம் ஏற்றக்கொண்ட அரசியலமைப்பின் அடித்தளத்தில் நமது ஜனநாயகம் கட்டப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட நாம் உருவாக்கிய நிறுவனங்களால் நமது ஜனநாயக ஆட்சி முறை வலிமை பெற்றுள்ளது. நமது அரசியலமைப்பும், ஜனநாயகமும் நமக்கு மிகவும் முக்கியமானவை.
நமது அரசியலமைப்பு நமது ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் நான்கு தூண்களாக நான்கு மதிப்புகளைக் கொண்டுள்ளது. அவை என்னவென்றால் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். இவை சுதந்திரப் போராட்டத்தின் போது நாம் மீண்டும் கண்டுபிடித்த நமது நாகரிகக் கொள்கைகள். அவை அனைத்திலும் மனித கண்ணியம் என்ற கருத்து இருப்பதாக நான் நம்புகிறேன்.
ஒவ்வொரு மனிதனும் சமம். மேலும் அனைவரும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள். அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியில் சமமான அணுகல் இருக்க வேண்டும். அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். பாரம்பரியமாக பின்தங்கிய நிலையில் இருந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியிருந்தது. இந்தக் கொள்கைகளை முதன்மையாகக் கொண்டு, 1947 இல் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினோம்.
பல சவால்கள் இருந்தபோதிலும், இந்திய மக்கள் ஜனநாயகத்திற்கு வெற்றிகரமான மாற்றத்தை மேற்கொண்டனர். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட வலியை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று, வரலாற்றின் தவறுகளுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
நமது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொருளாதார மேலாண்மை பெற்றுள்ளோம். கடந்த நிதியாண்டில் 6.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் உலகிலேயே வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும், உள்நாட்டு தேவை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.ஏற்றுமதிகள் அதிகாரித்து வருகின்றன. அனைத்து முக்கிய குறியீடுகளும் நமது பொருளாதரம் ாரோக்கிய நிலையில் இருப்பதை காட்டுகிறது.
நல்லாட்சி மூலம் ஏராளமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ரயில்வே துறையும் புதுமைகளை உருவாக்கி, சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வகை ரயில்கள் மற்றும் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இது முற்றிலும் மனிதாபிமானமற்றதாகும். எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதன் மூலம் ஆயுதப்படைகள் நம் நாட்டின் வலிமையை காட்டி உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications