Operation Sindoor: தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி! நீதி நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் ட்வீட்
டெல்லி: காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 25 பேரும் நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் என 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருமே தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் பங்கிட்டு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து அங்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. சிந்து நதி நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தானில் தண்ணீர் பிரச்சினை நிலவும்.
வேளாண்மை பாதிக்கும். மின்சாரம் தயாரிக்க தண்ணீர் இல்லாமல் இருளில் மூழ்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பீகாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். இந்த தாக்குதலுக்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தார்.
அது போல் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தார். கடந்த இரு தினங்களாக போர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால் எந்த நேரத்திலும் இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மே 7ஆம் தேதி அதிகாலை 1.44 மணிக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபர்பாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பஹவல்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏவுகணைகள் மூலம் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு முன்னர் இந்திய ராணுவம் தாக்குதலுக்கு தயாராவோம், வெற்றி பெறுவோம் என ட்வீட் போட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு தாக்குதலுக்கு பிறகு நீதி நிலைநாட்டப்பட்டது, ஜெய் ஹிந்த் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications