"எய்ட்ஸ்!" இந்தியாவில் 10 ஆண்டில் 17 லட்சம் பேருக்கு எச்ஐவி..நோய் பரவ இதுதான் காரணமாம்! பகீர் தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள எய்ட்ஸ் பாதிப்பு தொடர்பான ஆர்டிஐ கேள்விக்குத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது.
கடந்த 1980களின் தொடக்கத்தில் முதலில் கண்டறியப்பட்ட acquired immunodeficiency syndrome எனப்படும் எய்ட்ஸ், உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
1990களில் உலகெங்கும் பரவிய எய்ட்ஸ் நோய் பெருந்தொற்றாகவும் அறிவிக்கப்பட்டது. எந்த வித மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தவே முடியாத ஒரு கொடிய நோயாகவே எய்ட்ஸ் கருதப்படுகிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு தொடர்பான ஆர்டிஐ கேள்விக்குத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் பாதிப்பு என்பது கணிசமாகக் குறைந்தே வந்துள்ளது.

எப்படி பரவுகிறது
கடந்த 2011-12ஆம் ஆண்டு மட்டும் 2.4 லட்சம் பேருக்கு பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக எச்.ஐ.வி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2020-21 ஆண்டில் இது 85,268 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2011-2021 வரை பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 17,08,777 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை 15,782 பேர் ரத்தம் மற்றும் ரத்த மாற்றம் மூலம் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவியதால் 4,423 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில வாரியாக
மாநில வாரியாக பார்க்கும் போது, ஆந்திரப் பிரதேசத்தில் 3,18,814 பேருக்கும் மகாராஷ்டிராவில் 2,84,577 பேருக்கும் கர்நாடகாவில் 2,12,982 பேருக்கும் தமிழ்நாட்டில் 1,16,536 பேருக்கும் உத்தரப் பிரதேசத்தில் 1,10,911 பேருக்கும் குஜராத்தில் 87,440 பேருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எய்ட்ஸ் நோய் தொடர்ந்து குறைந்தே வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா
கடந்த 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உட்பட 23.18 லட்சம் பேர் எச்.ஐ.வி நோயுடன் வாழ்கின்றனர். நோயாளிகள் அளிக்கும் தகவல்களின்படியே இந்த விவரங்கள் சேகரிப்பட்டதாக அந்த ஆர்டிஐ பதிலில் கூறப்பட்டுள்ளது.

அறிகுறி & சிகிச்சை முறை
பொதுவாக எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சில வாரங்களில் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சோர்வு அறிகுறிகள் ஏற்படும். எச்ஐவி நோய்க்கு உரியச் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும். எய்ட்ஸ் ஏற்பட்டால் உடல் எடை வேகமாகக் குறையும். மேலும், காய்ச்சல் அல்லது இரவில் வியர்த்தல், சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எச்.ஐ.வி நோய்க்குச் சரியான சிகிச்சை முறை இல்லை. இருப்பினும், சரியான மருத்துவச் சிகிச்சை மூலம் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்தியாவில் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவில் எச்ஐவி நிலைமை சீராகி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தர்.

குறையும் பாதிப்பு
கடந்த 2000 ஆண்டு முதலே நாட்டில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிலும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், எச்.ஐ.வி பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இப்போது கொரோனா கடந்துள்ள நிலையில், எச்ஐவி கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் டெஸ்டிங் முறையை நாம் மேலும் வலுவாக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications