குறி வைச்சது பாஜகவுக்கு.. ஆனா அடி விழ போவது அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணிக்கு! இது ஓவைசி அரசியல் கணக்கு
டெல்லி: 2027 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம் என்று அறிவித்து அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும்- சந்திரசேகர் ஆசாதின் ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த புதிய கூட்டணி உருவாக்கியிருக்கும் அரசியல் கணக்கு பாஜகவை காட்டிலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
பாஜகவை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம் என்று அறிவித்து ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும்- சந்திரசேகர் ஆசாதின் ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. முஸ்லிம் - தலித் வாக்குகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 'சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா' கூட்டணியின் டார்கெட் பாஜக என்றாலும் உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கே இதனால் பலத்த அடி விழும்.

உத்தர பிரதேசம்
ஏனென்றால் 2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களில் இந்தியா கூட்டணி வென்றது. அப்போது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்த வாக்காளர்களிடையே இது குழப்பத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் உத்தர பிரதேசத்தின் சுமார் 40 சதவீத வாக்காளர்களை கொண்ட முஸ்லிம், தலித் சமூகங்களின் ஆதரவை பெறுவதில் இந்த கூட்டணி கவனம் செலுத்துகிறது. இதே வாக்காளர்கள் தான் இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 33.59 சதவீத வாக்குகளுடன் 37 இடங்களையும், காங்கிரஸ் 9.46 சதவீத வாக்குகளுடன் 6 இடங்களையும் வென்றன. முஸ்லிம், தலித் வாக்குகள் ஒருங்கிணைந்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வின்படி, 92 சதவீத முஸ்லிம்கள், 56 சதவீத ஜாதவ் அல்லாத தலித்துகள், 25 சதவீத ஜாதவ் தலித்துகள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்திருந்தனர். அதுவே எதிர்க்கட்சிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
என்ன நடக்கும்!
இப்போது ஓவைசி முஸ்லிம் வாக்குகளையும், சந்திரசேகர் ஆசாத் ஜாதவ் தலித் வாக்குகளையும் தனித்து பெற முயல்கிறார்கள். இதனால் அகிலேஷ் யாதவின் PDA- அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்கு விரிசல் ஏற்படலாம்.
இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர் அமிதாப் திவாரி கூறுகையில், "ஓவைசி - ஆசாத் கூட்டணி 3 முதல் 7 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. சராசரியாக 5 சதவீதம் என எடுத்து கொள்வோம். ஆசாத் ஜாதவ் சமூகத்தினரிடமிருந்து சுமார் 2 சதவீத வாக்குகளையும், ஓவைசி முஸ்லிம் வாக்குகளில் ஒரு பகுதியையும் ஈர்க்கலாம். இது வெல்ல போதுமானதாக இருக்காது என்றாலும் வெற்றி- தோல்வியை மாற்றி அமைக்க போதுமானதாக இருக்கும்" என்றார்.
இந்தியா கூட்டணி வாக்குகள் பிரியும்
2022 உபி சட்டசபைத் தேர்தலில் மஜ்லீஸ் கட்சி 95 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.. 0.49 சதவீத வாக்குகளையே பெற்றது. ஆசாத்தின் கட்சியும் 0.13 சதவீத வாக்குகளைப் பெற்று, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. எனவே, புதிய கூட்டணியின் மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கும் என்பது இன்னும் கேள்விக்குறிதான். இருப்பினும், இந்த கூட்டணியால் சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்கு வித்தியாசம் குறையும். அங்கு இந்தியா கூட்டணியின் வாக்குகள் பிரிந்தால் பாஜக வேட்பாளருக்குச் சாதகமான சூழல் உருவாகலாம். இதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கிய கவலை.
ஓவைசி திட்டம்
இதற்கிடையே அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் அகிலேஷ் யாதவின் திட்டமும் இப்போது அரசியல் விவாதமாகியுள்ளது. இந்த பயணம் இந்து வாக்காளர்களை ஈர்க்கும் என்றாலும், முஸ்லிம் வாக்காளர்களிடையே இது கடும் எதிர்ப்பை கிளப்பலாம். இதை ஓவைசி தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆக, பாஜகவைத் தடுக்க உருவானதாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த புதிய கூட்டணியால் பாஜகவுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. மாறாக முஸ்லிம் - தலித் வாக்குகளைப் பிரிப்பதால் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்குத் தான் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.




Click it and Unblock the Notifications
