சிந்து நதி நீர் இல்லாமல் தண்ணீர் பஞ்சம்? வலியை உணர தொடங்கிய பாகிஸ்தான்! இந்தியாவின் அடுத்த பிளான் என்ன!
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு சில வாரங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால், இப்போது அதன் வலியைப் பாகிஸ்தான் உணர ஆரம்பித்துவிட்டது. அங்குள்ள இரு முக்கிய மாகாணங்கள் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு சில வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில், இப்போதே அதன் வலியைப் பாகிஸ்தான் உணர ஆரம்பித்துவிட்டது.. பாகிஸ்தானில் உள்ள இரு முக்கிய அணைகளான மங்களா (ஜீலம் நதியின் குறுக்கே) மற்றும் தர்பேலா (சிந்து நதி குறுக்கே) ஆகிய அணைகளில் நீர் குறைந்து வருகிறது.
அதிகரிக்கும் பாதிப்பு
சிந்து நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதால் பாகிஸ்தானுக்குப் போகும் செனாப் நதி நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அங்குக் கோடைக் காலத்தில் வளரும் ப்ளீக் காரீஃப் (கோடை பயிர்கள்) மிக மோசமாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் காரீஃப் பருவத்தின் விதைப்பு தொடங்கவுள்ள நிலையில் மேலும் மோசமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் தஜிகிஸ்தானில் நடந்த பனிப்பாறை பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்துப் பேசியிருந்தார். சர்வதேச அரங்கில் பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பாசனம் மற்றும் புனல் மின்நிலையங்களில் முக்கிய பங்கு வகிக்கும் மங்களா மற்றும் தர்பேலா அணையின் நீர் வரத்து 21 சதவிகிதமும் நீர் சேமிப்பு சுமார் 50% வரையும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தானின் சிந்து நதி அமைப்பு தெரிவித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை
வரும் மே முதல் செப்டம்பர் வரை அங்குக் கோடைக் காலப் பயிர்கள் விளைவிக்கப்படும். இந்தியா மேற்கொண்டு செனாப் நதியின் நீர்வரத்தைக் குறைத்தால் அது காரீப் பருவத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தானின் சிந்து நதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 21%க்கு மேல் நிச்சயம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அணை அதிகாரிகள் நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அங்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா பாக்லிஹார் மற்றும் சலால் அணைகள் மூலம் நீரை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே பாகிஸ்தானின் வேளாண் நடவடிக்கைகள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
50% மட்டுமே இருக்கு
இப்போது பாகிஸ்தானின் உள்ள மங்களா அணையில் 50%க்கும் குறைவாகவே நீர் இருப்பதாக அந்நாட்டில் உள்ள அணை நீர் விவரங்களைப் பகிரும் தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் தர்பேலா அணையில் உள்ள நீரின் அளவு 50%க்கு சற்று அதிகமாக மட்டுமே இருக்கிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இருந்தவரை இந்தியாவில் எந்தளவுக்கு மழை பெய்கிறது என்பது குறித்த விவரங்களைக் கட்டாயம் பாகிஸ்தான் உடன் பகிர வேண்டும். ஆனால், இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த ஒப்பந்தத்தைப் பகிரத் தேவையில்லை. இதனால் திடீரென வெள்ளம் ஏற்பட்டால் கூட அதைப் பாகிஸ்தானால் நிர்வகிப்பதில் சிரமம் இருக்கும்.
மிக மோசமான பாதிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய இரு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகள் முழுக்க முழுக்க சிந்து நதி நீரையே நம்பியுள்ளது. இவை வரும் காலங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்படும். ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளின் நீரை இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலேயே கூறப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த நதிகளில் அணைகளில் இந்தியா கட்ட விடாமல் பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதனால் அந்த நதி நீரும் பாகிஸ்தானுக்குச் செல்லும் சூழல் வந்தது. இப்போது அந்த பகுதிகளிலும் அணைகளைக் கட்டும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்த இருக்கிறது. இப்படி இந்தியா அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு மேலும் சிரமத்தை அளிக்கவே செய்யும்.












Click it and Unblock the Notifications