இந்தியாவுடன் சேர்ந்து எங்களுக்கு எதிராக பேசுவதா.. ஆப்கானிஸ்தான் தூதரை நேரில் வர சொன்ன பாகிஸ்தான்
டெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய ஆப்கான் வெளியுறவு அமைச்சர், பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு எதிராக கூறிய கருத்துகளுக்கு அந்நாடு கடும் ஆட்சேபனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி கடந்த வியாழக்கிழமை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தார். கடந்த ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் தாலிபான் அரசு பிரதிநிதி இவரே ஆவர்.

பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
தனது 7 நாள் இந்திய சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முத்தாக்கி பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். பின்னர் இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அமைச்சர் பேச்சுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ஆப்கானிஸ்தான் கடுமையாகக் கண்டித்ததோடு, இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்திருந்தது.
கடுமையான ஆட்சேபனை
பிராந்திய நாடுகளில் இருந்து எழும் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் கண்டனம் செய்ததோடு, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தன. இதற்கு தான் பாகிஸ்தான் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனை என்ற முத்தாக்கியின் கூற்றையும் நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பாகிஸ்தான் மீது சுமத்துவது, பிராந்திய அமைதியை உறுதிசெய்ய ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் கடமையை செய்வதில் இருந்து விலக்கு அளிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதரை சனிக்கிழமை பாகிஸ்தான் அழைத்து, தங்கள் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளது.
4 மில்லியன் பேருக்கு அடைக்கலம்
பாகிஸ்தான் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட நான்கு மில்லியன் ஆப்கானிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் அளித்ததை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதால், அங்கீகரிக்கப்படாத ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியது.
பாகிஸ்தான், மற்ற நாடுகளைப் போலவே, தங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் இருப்பைக் கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் நல்ல அண்டை நாடுகளின் உறவின் அடிப்படையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு மருத்துவ மற்றும் படிப்பு விசாக்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு
அமைதியான, நிலையான, பிராந்திய அளவில் இணைக்கப்பட்ட மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைக் காண விரும்புவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நல்லுறவு வலுப்படுவதால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பதாக சர்வதேச நோக்கர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications