உங்க வீட்டு நாயாவது தியாகம் செய்ததா? மோடி ஒரு எலி- மல்லிகார்ஜூன கார்கே பேச்சால் பாஜக எம்பிக்கள் அமளி
டெல்லி: இந்த தேசத்துக்காக உங்கள் வீட்டு நாயாவது தியாகம் செய்திருக்கிறதா? பிரதமர் மோடி பேசும் போது சிங்கமாக; செயல்படும்போது எலியாக இருக்கிறார் என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த. கூட்டத் தொடரில் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.

இதேபோல் பீகார் கள்ளச் சாராய சாவுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் அமளிக்கு இடையே சபை நடைபெறுவதுமாக தொடர் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசிய பேச்சு இன்று நாடாளுமன்றத்தில் பாஜகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. ராஜஸ்தானில் பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சியினர் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்திருக்கின்றனர். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். ஆனால் பாஜகவினர் இந்த நாட்டுக்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்? உங்கள் வீட்டு நாயாவது இந்த தேசத்துக்காக தியாகம் செய்திருக்குமா? உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது தியாகம் செய்திருப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும் நமது எல்லையில் சீனா 20 முறை ஊடுருவிவிட்டது. சீனா அதிபர் ஜின்பிங்கை 18 முறை பிரதமர் மோடி சந்தித்து பேசிவிட்டார். இத்தனைக்கும் கால்வனில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த பின்னர்தான் இந்த 18 சந்திப்ப்களும் நடந்திருக்கிறது. ஆனாலும் சீனாவின் ஊடுருவலும் அத்துமீறலும் தொடருகிறதே ஏன்? பிரதமர் மோடி வெளியே சிங்கம் போல பேசுகிறார்.. உண்மையில் எலியைப் போலத்தான் செயல்படுகிறார். பிறகு ஏன் நாடாளுமன்றத்தில் சீனாவின் அத்துமீறல், ஊடுருவல் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயங்குகிறது என்றும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.
மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ராஜ்யசபாவில் பாஜக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபா பாஜக குழு தலைவரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், மல்லிகார்ஜூன கார்கே அநாகரீகமாக பேசி உள்ளார். அவரது பேச்சு மொழி எதிர்பாராதது. அநாகரீகமாக பேசியதற்காக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் முன்பாக பொய்யான தகவல்களை பேசி வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவிடம், நாடாளுமன்றத்திடம், நாட்டு மக்களிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜூ கூறுகையில், மல்லிகார்ஜூன கார்கே இது போல தரம்தாழ்ந்து பேசியிருப்பார் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக தமக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து மல்லிகார்ஜூன கார்கே பேசியிருக்க வேண்டும். அவரது இந்த பேச்சு கடும் ஆட்சேபனைக்குரியது என்றார்.
ஆனால் பாஜகவிடம் தாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது; இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டது காங்கிரஸ் இயக்கம். நான் நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் பேசினேன். அதற்காக ஏன் ராஜ்யசபாவில் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர்? என மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications