5 ஆண்டுகளில் 111 எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி தாவல்.. ஆனால் அதிக பேர் ஐக்கியமானது பாஜகவில் இல்லையாம்
டெல்லி: கட்சி தாவல் என்பது சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கட்சி சார்பில் மக்களை சந்தித்து போட்டியிட்டு, பிறகே காரணமே இல்லாமல் ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து பதவி வாங்குவது தொடர்கிறது. இதற்கிடையே இது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வு வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், குறைந்தது 111 எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் நேஷனல் எலக்சன் வாட்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

111 பேர்
கட்சி மாறிய 111 பேரில் 26 பேர் லோக்சபா எம்பிக்கள், 7 ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் 78 எம்எல்ஏக்கள் ஆகும். இதுபோல கட்சி மாறியவர்களில் 29 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அதாவது கட்சி மாறியவர்களில் 26 சதவீத் பேர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர்.. அதேநேரம் அதிக உறுப்பினர்கள் ஐக்கியமான கட்சிகள் பட்டியலில் பாஜக முதலிடத்தில் இல்லை.
மாறாக நாகா மக்கள் முன்னணி என்ற கட்சி தான் முதலில் இருக்கிறது. அந்த கட்சியில் மட்டும் மொத்தம் 32 பேர் ஐக்கியமாகியுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 29 சதவீதமாகும். கடந்த 2025ல் இரு கட்சிகளும் இணைந்த நிலையில், அப்போது நாகா மக்கள் முன்னணியில் மொத்தமாக 32 எம்எல்ஏக்கள் இணைந்தனர்.
என்ன நடந்தது!
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் வென்ற எம்எல்ஏக்கள் அனைவரும் நாகா மக்கள் முன்னணி கட்சியில் இணைந்ததே இதற்கு காரணம். 60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டசபையில் முதலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (32 எம்எல்ஏ), பாஜக (12 எம்எல்ஏ) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த சூழலில் தான் நாகா மக்கள் முன்னணி உடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஐக்கியமானது. இதன் மூலம் அங்கு எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக
பாஜகவில் இணைந்தவர்களை பொறுத்தவரை.. 29 பேரில் 7 பேர் ராஜ்யசபா எம்பிக்கள், 22 பேர் எம்எல்ஏக்கள் ஆகும். அதேநேரம் ஒரு லோக்சபா எம்பி கூட பாஜகவுக்கு மாறியதாக குறிப்பிடப்படவில்லை. மாநிலங்களவையில் பாஜகவில் இணைந்த 7 பேரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள். ஸ்வாதி மாலிவால், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராகவ் சத்தா, சந்தீப் குமார் பதக், விக்ரம்ஜித் சிங் சாஹ்னி மற்றும் ராஜிந்தர் குப்தா ஆகியோர் சமீபத்தில் தான் பாஜகவில் ஐக்கியமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் ஐக்கியமான எம்எல்ஏக்களை பொறுத்தவரை கோவாவில் இருந்து 8 காங்கிரஸ் உறுப்பினர்கள், குஜராத்தில் இருந்து 4 காங்கிரஸ் உறுப்பினர்கள், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மணிப்பூரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் பாஜகவுக்கு மாறியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமார் பாண்டே, மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ. நிர்மலா சப்ரே, கர்நாடகாவைச் சேர்ந்த ஜி. ஜனார்த்தன ரெட்டி ஆகியோரும் பாஜகவில் ஐக்கியமானோர் பட்டியலில் உள்ளனர். குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களான சி.ஜே. சாவ்தா, அர்ஜுன் மோட்வாடியா, அரவிந்த் லதானி, சிராக் படேல் ஆகியோர் பதவி விலகி பாஜகவில் இணைந்த பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்
2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிறகு, திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 20 லோக்சபா எம்பிக்கள் கலகம் செய்து, ஜூன் 14ம் தேதி என்சிபிஐ என்ற கட்சியுடன் இணைந்தனர். மேலும், அவர்கள் பாஜக தலைமையிலான என்டிஏ அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தவிர மாற்று கட்சிகளில் இருந்து காங்கிரஸில் 9 பேரும், சிவசேனாவில் 8 பேரும், என்பிபி கட்சியில் 6 பேரும், அருணாச்சல மக்கள் கட்சியில் 4 பேரும் ஐக்கியமாகியுள்ளனர்.
உறுப்பினர்களை இழந்தவர் என பார்க்கும்போது முன்பே குறிப்பிட்டது போல அந்த நாகாலாந்து பிராந்திய கட்சியில் இருந்தே அதிகபட்ச எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர். அதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 20 பேரும், காங்கிரஸில் இருந்து 19 பேரும் கட்சி மாறியுள்ளனர்.
மாநிலம் வாரியாக
543 லோக்சபா எம்பிக்களில் 26 பேர், அதாவது சுமார் 5 சதவீதம் பேர் கட்சி மாறியுள்ளனர். 233 ராஜ்யசபா எம்பிக்களில் 7 பேர், சுமார் 3 சதவீதம் பேர் கட்சி மாறியுள்ளனர். 4,100 எம்எல்ஏக்களில் 78 பேர், சுமார் 2 சதவீதம் பேர் கட்சி தாவியுள்ளனர். மொத்தம் 17 மாநிலங்களில் கட்சி தாவல் நடந்துள்ளது. இதில் நாகாலாந்து 32 பேருடன் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் 20 பேர், தெலங்கானா 9 பேர், கோவா மற்றும் பஞ்சாப் தலா 8 பேருடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சீர்திருத்தம் தேவை
கட்சி தாவுதல் தொடர்பான இந்த ஆய்வை வெளியிட்ட ஜனநாயக சீர்திருத்த அமைப்பு, இந்தியாவின் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக அரசியலமைப்பின் 10வது அட்டவணையில் திருத்தம் செய்து, எம்பிக்களின் தகுதி நீக்கம் தொடர்பான முடிவை மக்களவை அல்லது மாநிலங்களவை தலைவருக்கு பதிலாக குடியரசு தலைவரும், எம்எல்ஏக்கள் தொடர்பான முடிவை ஆளுநரும் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்க வேண்டும் பரிந்துரைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
