அதெப்படி திமிங்கலம்.. உணவகத்தில் உட்கார்ந்து கொண்டு சோமேட்டோவில் ஆர்டர்.. பாதி விலைக்கு வந்த பார்சல்
டெல்லி: பிரபல காஃபி ஷாப் ஆன ஸ்டார்பக்சில் இருந்து கொண்டே சோமோட்டா மூலமாக அதே உணவகத்தில் ஆர்டர் போட்டதாகவும், இதன் மூலம் அந்த காஃபியை உண்மையான விலையை விட பாதி விலைக்கு தன்னால் வாங்க முடிந்ததாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருப்பது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
மக்களிடையே ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்ட இன்றைய கால கட்டத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தொடங்கி உணவு வரைக்கும் ஆர்டர் போட்டு இருந்த இடத்தில் இருந்தே வாங்கி சாப்பிட்டு விட முடிகிறது. குறிப்பாக ஃபுட் டெலிவரியானது தற்போது இந்திய மக்களிடையே பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

காலை , இரவு நேரங்களில் வாகனங்களில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவுப் பொருளை எடுத்துக் கொண்டு சோமோட்டா, ஸ்விக்கி டெலிவரி மேன்கள் சாலைகளில் சிட்டாக பறப்பதை காண முடியும். பொதுவாக ஓட்டலில் சென்று சாப்பிடுவதை விட சோமோட்டா, ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது கொஞ்சம் காஸ்ட்லியானது என்றே வாடிக்கையாளர்கள் பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது.
இதற்கு டெலிவரி சார்ஜ் கட்டணம் உள்ளிட்டவையும் வசூலிக்கப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் வாடிக்கையாளர்களை கவர ஆஃபர்களையும் இந்த உணவு விநியோக நிறுவனங்கள் அள்ளி தெளிக்கின்றன. குறிப்பிட்ட தொகைக்கு மேலே ஆர்டர் செய்தால் 40 சதவீதம், 50 சதவீதம் என பல கவர்ச்சிகரமாக ஆஃபர்களை சொமோட்டா மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் வழங்குவது ஆர்டர் போட்டு சாப்பிடும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. பிரபல கஃபி ஷாப் ஆன ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் இருந்து கொண்டே அதே உணவகத்தில் இருந்து ஆர்டர் போட்ட வாடிக்கையாளர் 50 சதவீத சலுகையுடன் குறைந்த விலையில், காஃபி பெற்றதாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். சந்தீப் மால் என்ற நபரின் இந்த ட்விட்டர் பதிவு நெட்டிசன்களை ஒரு நிமிடம் உற்று பார்க்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
அது எப்படி உணவகத்தில் இருந்து கொண்டே குறைந்த விலைக்கு சோமோட்டாவில் ஆர்டர் போட்டு இருக்க முடியும் என நெட்டிசன்கள் பலருக்கும் வியப்பை கொடுத்து இருந்தது. இது தொடர்பாக தனது பதிவில் சந்தீப் மால் கூறியிருப்பதாவது:- ரூ.400 விலை மதிப்புள்ள காஃபியை ஸ்டார்பக் உணவகத்தில் இருந்து கொண்டே சோமோட்டோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தேன்.
சோமோட்டாவில் கோல்டு மெம்பராக இருக்கும் நான், ஃப்ரீ டெலிவரி ஆப்ஷன் மற்றும் டிஸ்கவுன்ட் கூப்பன்கள் மூலமாக பாதி விலைக்கு அதாவது ரூ.190 க்கு ஸ்டார்பக்ஸில் ஆர்டர் செய்தேன். சிறிது நேரத்தில் ஆர்டரை பிக் அப் செய்த ஸ்மோட்டோ டெலிவரி மேன், எனது டேபிளுக்கே வந்து காஃபியை கொண்டு வந்து கொடுத்து விட்டு போனார். பலரும் இதேபோல், டெலிவரி செய்வதால் டெலிவரி மேனுக்கு எனது செயல் எந்த ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வருகிறது. அந்த வகையில் ஒரு நெட்டிசன் கூறுகையில், "நானும் சில உணவு விடுதிகளிலும் இதே முறையை கையாண்டு அசல் விலையை விட குறைவான விலைக்கு உணவை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். சில நேரங்களில் உணவக உரிமையாளர்கள் கூட அதிக சலுகை தங்களுக்கும் கிடைக்கும் எனக் கூறி என்னை சோமோட்டோவில் ஆர்டர் போட கூறியிருக்கிறார்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
இதேபோல் பல நெட்டிசன்களும் டெக்னாலாஜியை சரியாக கையாண்டு லாபம் ஈட்டியிருக்கிறீர்கள் என சந்தீப் மால் பதிவுக்கு கீழே பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். எனினும் இது குறித்து ஸ்டார்பக்ஸ் காஃபி ஷாப் நிறுவனம் தற்போது வரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications