ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!
டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறைந்தபாடில்லை. மறுபுறம் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து மத்திய மறைமுக வரிகள் தலைவர் சஞ்சய் குமார் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால், "தற்போதைக்கு இவற்றை மறைமுக வரி விதிப்பின் கீழ் கொண்டுவர முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

"பெட்ரோல் மற்றும் டீசல் இந்த இரண்டு பெட்ரோலியப் பொருட்களும் தற்போது மத்திய கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரியின் (VAT) கீழ் உள்ளன. இவை மாநிலங்களுக்கு 'VAT' மூலமாகவும், மத்திய அரசுக்கு கலால் வரி மூலமாகவும் கணிசமான வருவாயைப் பெற்றுத்தருகின்றன. வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு இந்த பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர இயலாது.
கடந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு உள்நோக்கத்துடன் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழிவில் சேர்க்கவில்லை. சேர்க்க சட்டப்படி நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் இந்த முடிவு மாநிலங்களிடமிருந்துதான் வர வேண்டும். மாநிலங்கள் ஒப்புக்கொண்டவுடன், கவுன்சிலில் வரி விகிதத்தை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு எடுக்கப்பட்டவுடன், அது சட்டத்தில் சேர்க்கப்படும்" என்று கூறியிருந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, பெட்ரோல், டீசல், மதுபானங்கள் போன்ற பொருட்கள் அதன் வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் கலால் வரி மற்றும் வேட் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளன. பல மாநிலங்களுக்கு, இவை அவற்றின் வரி வருவாயில் 25-30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications