பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பறக்கும் படம் போலியாம்.. சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!
டெல்லி: 25,000 அடி உயரத்தில் கண்ணாடியை மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை தளமாகக் கொண்ட பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அணமையில் நேரில் சென்று அதன் உற்பத்தி நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடி பயணித்த தேஜஸ் விமானம், மணிக்கு 1,975 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த விமானம் முதலில் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதற்கு தேஜஸ் என பெயரிட்டார். இந்நிலையில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் விமானத்தில் பறந்திருக்கிறார்.
'தேஜஸ் விமானத்தில் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு இருந்தது. இந்த பயணம் நமது நாட்டின் சுயசார்பு திறன்கள் மீதான எனது நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும் நமது தேசத்தின் திறன் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை இந்த தயாரிப்பு ஏற்படுத்தியுள்ளது' என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்த விடியோக்கள் இணையத்தில் தீயாகப் பரவியது. தேஜஸ் விமானத்தில் வானில் பறந்தபோது பிரதமர் மோடி மாஸ்க்கை கழற்றிவிட்டு கை அசைத்தார். பின்னர், ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு கெத்தாக நடந்து வரும் காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் தேஜஸ் விமான பயணம் குறித்து பதிவிட்டுள்ளார். ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் பதிவில், "25,000 அடி உயரத்தில் கண்ணாடி மூடாமல் ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி என்னிடம் கூறினார். ஏனெனில் அந்த உயரத்தில் பிரதமர் வளிமண்டல அழுத்தத்தால் தரையில் விழுந்திருப்பார். இதை பிரதமர் அலுவலகம் மறுக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications