சனாதனத்திற்கு எதிராக செயல்படும் ஸ்டாலின்! திருப்பரங்குன்றம் தீர்ப்பு வந்த கையோடு பியூஷ் கோயல் ஆவேசம்
டெல்லி: திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மதுரை ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இது பக்தர்களுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி என்றார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் உச்சி பிள்ளையார் கோயில் தீபம் ஏற்றப்படும். இதற்கிடையே தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட் மதுரை தனி நீதிபதி மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

இருப்பினும், மலை உச்சியில் உள்ள தூணுக்கு மிக அருகே தர்கா இருப்பதாலும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது நடைமுறை இல்லை எனச் சொல்லியும் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் விசாரித்தனர். விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்வதாக உத்தரவிட்ட நீதிபதிகள், அங்குத் தொன்மையான சின்னத்தைப் பாதுகாக்கத் தேவையான நிபந்தனைகளைத் தொல்லியல் துறை விதிக்கலாம் என்றனர். தீபத்தூணில் விளக்கேற்றும் நிகழ்வின்போது அங்குப் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் இதை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை பாஜக தரப்பு வரவேற்றுள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றத் தீர்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்ற பியூஷ் கோயல், திருப்பரங்குன்றத் தீர்ப்பு பக்தர்களுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
சனாதன தர்மத்திற்கு எதிராகவே தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் பேசி வருகிறார்கள் என்ற பியூஷ் கோயல், இருவருமே இந்து மனநிலைக்கு எதிராகவே தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவதாகவும் சாடினார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோல செயல்படுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications