செய்தியாளர்களை சந்திக்காததற்கு காரணமே இது தானாம்.. பிரதமர் மோடி கொடுத்த விளக்கத்தை பாருங்க
டெல்லி: பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்காததற்கு என்ன காரணம் என்பதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திப்பது இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஊடகங்களுக்கு தனியாக பேட்டி அளிக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனமாக உள்ளது.

உழைக்க வேண்டியது உள்ளது: இந்த நிலையில் தான் டெல்லியில் பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியிடம், பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
நான் கடுமையாக உழைக்க வேண்டியது உள்ளது. மக்களின் வீடுகளுக்கு நான் செல்ல வேண்டும். ரிப்பன்களை வெட்டிக் கொண்டு விக்யான் பவனில் புகைப்படம் எடுத்துக்கொள்ள எனக்கும் தெரியும். ஆனால், அதை நான் செய்வது இல்லை. ஜார்க்கண்டில் உள்ள ஒரு சிறிய மாவட்டத்திற்கு செல்கிறேன். சிறிய திட்டங்கள் தொடர்பாக கூட நான் உழைக்கிறேன்.
புதிய கலாசாரம்: நான் ஒரு புதிய கலாசாரத்தை கொண்டு வந்துள்ளேன். அந்த கலாசாரம் சரியானது என உணரப்பட்டால் ஊடகங்கள் இதை சரியாக எடுத்து வைக்கும். இல்லையென்றால் ஊடகங்கள் அப்படி செய்யப் போவது இல்லை. செய்தியாளர்கள் தங்கள் பார்வையையும் கொள்கைகளையும் முன்னிறுத்துகின்றனர். லோக்சபாவிற்கு தான் நான் பதிலளிக்க வேண்டியவன்.
ஊடகங்கள் இல்லாமலேயே: ஊடகங்கள் இன்று தனி நிறுவனமாக இல்லை. இதற்கு முன்பாக நான் ஆஜ் தக் - செய்தி ஊடகத்தில் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால், இன்று நான் யாரிடம் பேசுகிறேன் என்பதை மக்கள் கூட அறிந்து வைத்து இருக்கிறார்கள். மற்றவர்களை போல நீங்களும் ( செய்தி தொகுப்பாளர்கள்) உங்களின் பார்வையும் மக்களுக்கு தெரிந்து விடுகிறது.
இதற்கு முன்பாக தொலைத்தொடர்புக்கு ஊடகங்கள் மட்டுமே இருந்தது. ஆனால், தொலைத்தொடர்பை பல்வேறு வகையிலும் மேற்கொள்ள முடியும். ஊடகங்கள் இன்றியே பொதுமக்கள் தங்கள் குரலை தற்போது எழுப்ப முடியும். அதேபோல பதிலளிக்க வேண்டிய நபர் கூட தனது கருத்தை ஊடகங்கள் இன்றியே வெளிப்படுத்த முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அம்பானி - அதானி: இந்த நிலையில் இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பானி- அதானி குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். இப்போது நேரு குடும்பமே என்னை அம்பானி - அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது.
சாதனையாளர்கள்: ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கவுரவிக்காமல் மதிப்பளிக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி செய்யாவிட்டால் எப்படி விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்?. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications