தேர்தல் வேலைக்கு குட்டி பிரேக்.. ஜாலியாக வீடியோ கேம் விளையாடிய பிரதமர் மோடி! வியந்த கேமர்கள்
டெல்லி: தேர்தல் பரபரப்புக்கு நடுவே பிரதமர் மோடி, நாட்டின் டாப் கேமர்களுடன் கலந்துரையாடி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அப்போது கொஞ்ச நேரம் பிரதமர் மோடி வீடியோ கேமும் விளையாடி இருக்கிறார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் பரபரப்புக்கு இடையே பிரதமர் மோடி ஜாலியாக வீடியோ கேம் விளையாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து பார்க்கலாம்.
கேமிங் துறை: ஒரு காலத்தில் பொழுது போக்கவும் ரிலாக்ஸ் செய்யவும் இருந்த வீடியோ கேம் இப்போது பலருக்கு வாழ்க்கையாகவே மாறி இருக்கிறது. பலரும் கேமிங்கை தங்கள் கேரியராகவே எடுத்துள்ளனர். அதிலும் இப்போது ஆசிய கேம்ஸ் உள்ளிட்டவற்றில் இ கேம்களை பதக்க பட்டியலிலும் சேர்த்துள்ளனர். இதனால் வீடியோ கேம்கள் வேகமாக வளரும் முக்கியமான ஒரு துறையாக உருவெடுத்துள்ளது.
பிரதமர் மோடி: இதற்கிடையே பிரதமர் மோடி நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களை சந்தித்தார். தொடர்ந்து வளர்ந்து வரும் கேமிங் துறையை டெவலப் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, தனது அரசு இதுபோல புதிதாக வளரும் துறைகளுக்கு ஆதரவு தரும் என்று தெரிவித்தார்.
மோர்டல், தக், பயல் கேமிங், மித்பட் மற்றும் கேமர்ஃபிலீட் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். மேலும், அனிமேஷ் அகர்வால், மிதிலேஷ் படன்கர், பயல் தாரே, நமன் மாத்தூர் மற்றும் அன்ஷு பிஷ்ட் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
கலந்துரையாடல்: அந்த வீடியோவில் இளம் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். அவர்கள் தங்கள் அனுபவங்களையும் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களையும் பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.. மேலும், இந்த டிஜிட்டல் ஸ்பேஸ் தங்களுக்கு எப்படி உதவியது அதன் மூலம் வாழ்க்கையில் எப்படி முன்னேறினார்கள் என்பதையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கேமிங் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் குறித்தும் இதில் விவாதித்துள்ளனர். மேலும், கேமிங் துறையில் பெண்கள் மிகக் குறைவாக உள்ளது குறித்தும் கலந்துரையாடி உள்ளனர். கேமிங் துறைக்கு மத்திய அரசு பல நன்மைகளைச் செய்துள்ளதாகக் கூறி அவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்தனர்.
வீடியோ கேம் விளையாடிய மோடி: அதைத் தொடர்ந்து அவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கேமும் விளையாடி இருக்கிறார். இதில் பிரதமர் மோடி வீடியோ கேம் விளையாடும் திறனைப் பார்த்து அங்கிருந்த கேமர்களே கூட வியந்து கைதட்டினர். இறுதியாக கேமிங் துறைக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நிச்சயம் தனது அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு உறுதி அளித்தார்.
டிஜிட்டல் யுகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, வீடியோ கேமும் விளையாடிய இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications