மோடி அமைச்சரவையில் 4 இடங்கள்- சாதித்தது ஜேடியூ.. கர்நாடகா பாஜக எம்.பி ஷோபா உட்பட 4 பேருக்கும் இடம்!
டெல்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு (ஜே.டி.யூ) 4 இடங்கள் வழங்கப்படுகிறதாம். அதேபோல் கர்நாடகாவின் ஷோபா உட்பட 4 பாஜக எம்.பி.க்கள் மத்திய இணை அமைச்சர்களாகின்றனராம்.
2019 லோக்சபா தேர்தலில் பீகாரில் பாஜக 17 இடங்களிலும் ஜே.டி.யூ.16 இடங்களிலும் வென்றது. அதனால் மத்திய அமைச்சரவையில் 3 இடங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டது ஜேடியூ. ஆனால் இதனை பாஜக ஏற்கவில்லை.
இந்த கோபத்தில் மத்திய அமைச்சரவையில் ஜே.டி.யூ. இடம்பெறவும் இல்லை. இருப்பினும் பீகாரில் ஜே.டியூ.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

ஜேடியூவுக்கு 4 அமைச்சர் பதவிகள்
தற்போதைய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஜே.டியூ. 4 அமைச்சர் பதவிகளை கேட்டது. தொடக்கத்தில் இதனை ஏற்க தயங்கிய பாஜக இப்போது ஒப்புக் கொண்டுள்ளதாம். ஜேடியூவுக்கு 1 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

எல்.ஜே.பி. அதிருப்தி அணி
பீகாரில் பாஜகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியான லோக்ஜனசக்தி (எல்.ஜே.பி) உடைந்துவிட்டது. லோக் ஜனசக்தியின் அதிருப்தி பிரிவு தலைவரான பசுபதி பராஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் பாஜகவை நம்பிக் கொண்டிருந்த லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தனித்துவிடப்பட்டுள்ளார்.

கர்நாடகாவுக்கு 4 இடம்
இதேபோல் கர்நாடக பாஜக எம்.பி.க்கள் 4 பேருக்கும் மத்திய இணை அமைச்சர்களாகின்றனர். கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் அதிதீவிர விசுவாசியான ஷோபா கரண்ட்லஜே, ஷோபா கரண்ட்லஜே, ராஜீவ் சந்திரசேகர், பகவத் குபா, ஏ. நாராயணசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாகின்றனர்.

4 மாஜி முதல்வர்கள்
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 4 முன்னாள் மாநில முதல்வர்கள், 18 முன்னாள் மாநில அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர். மேலும் 39 முன்னாள் எம்.எல்.ஏக்களும் 3 முறைக்கு மேல் வெற்றி பெற்ற 23 எம்.பிக்களும் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர்.












Click it and Unblock the Notifications