எதிர்க்கட்சிகளை தீவிரவாதிகளோடு.. நாட்டின் பிரதமரே ஒப்பிடுவது ஜனநாயகத்திற்கு அழகா?
டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி (I.N.D.I.A), மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுக்கு ஆகப் பெரும் கலக்கத்தை கொடுத்திருக்கிறது என்பதை அவர்களது கருத்துகளே உறுதி செய்து வருகின்றன.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸை உள்ளடக்கி 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் அணிவகுத்துள்ளன. இந்த கூட்டணிக்கு I.N.D.I.A எனவும் பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தில் பெயரிடப்பட்டது. I.N.D.I.A கூட்டணியை எதிர்கொள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு தைரியம் இருக்கிறதா? என பெங்களூரிலேயே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சவால்விட்டிருந்தார்.

இந்தியா கூட்டணி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலான NDA Vs I.N.D.I.A என்ற அடிப்படையில்தான் இருக்கும் என்பது தெளிவாகி இருக்கிறது. இந்தியா, இந்துஸ்தான், இந்துராஷ்டிராம் என பாஜக கூட்டணி கட்சிகள் உச்சரித்த நிலையில் அதனையே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தங்களது ஆயுதமாக கையில் எடுத்திருக்கின்றன. இது பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவர்களே எதிர்பார்க்காத அதிர்ச்சியாகத்தான் தெரிகிறது. ஏனெனில் இந்தியா கூட்டணியின் பெயரை முன்வைத்தே தொடர்ச்சியாக விமர்சனங்களை பாஜக தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மோடி விமர்சனம்: இதன் உச்சமாகத்தான் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்களிடையே முன்வைத்த விமர்சனம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அன்னியர்களால் தொடங்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி என ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற பெயரை வைத்து கொண்டனர்; இந்தியன் முஜாஹிதீன்கள் கூட இந்தியா என பெயர் வைத்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பும் இந்தியா பெயரை சேர்த்தது என இந்தியா கூட்டணியை பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இப்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
அரச, மத பயங்கரவாதிகள்: ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியானது, அதிகாரத்தால்- ராணுவ அடக்குமுறைகளால் இந்தியாவை கைப்பற்றி இந்திய வளங்களை சூறையாடி இந்தியர்களை வேட்டையாடியது. அது ஒரு அரச பயங்கரவாதம். அதேபோல இந்தியன் முஜாஹிதீன்கள் அமைப்பு என்பது மத பயங்கரவாத இயக்கம். நாசவேலைகள் மூலம் நாட்டை சீர்குலைத்து இந்தியர்கள் ரத்தம் குடித்து தங்களது கோட்பாடுகளை நிலைநாட்ட முயலுகிற அப்பட்டமாக ஒடுக்கப்பட வேண்டிய பயங்கரவாத இயக்கம், இந்தியன் முஜாஹிதீன்கள்.
ஜனநாயக கூட்டணி: ஆனால் 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு உருவாக்கியிருக்கும் I.N.D.I.A கூட்டணி அப்படியானது அல்ல என்பது பிரதமர் மோடி அறியாததும் அல்ல. இந்த நாட்டில் தேர்தல் அரசியலில் பங்கேற்கின்றன, தேசத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆளுகிற அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணிதான் I.N.D.I.A என்பது. இந்தியா கூட்டணி என்பது மத்தியில் ஆளும் பாஜகவை நேருக்கு நேர் அரசியல் களத்தில் ச்ந்திக்கக் கூடியது என்பது பிரதமர் மோடி அறியாதது அல்ல.
ஜனநாயகத்தின் மீது பாஜகவைவிட அதிக நம்பிக்கை வைத்து அதற்காக ஒரு கூட்டமைப்பை, கூட்டணியை உருவாக்கி ஜனநாயக வழிப் போராட்டங்களை முன்னெடுக்கிற ஒரு அணியை கொள்ளையடிக்க வந்த அரச பயங்கரவாத கும்பலோடும் ரத்தம் குடிக்கிற மத பயங்கரவாத கும்பலோடும் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடி பேசுவது ஜனநாயக விழுமியங்களை சர்வநாசமாக்கக் கூடியதுதான் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்து.
ஜனநாயக யுத்தத்தை ஜனநாயக யுத்த களத்தில் எதிர்க்காமல் பயங்கரவாத இயக்கங்களைப் போல சித்தரித்து பிரசாரம் செய்வது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் எடுக்கும் யுக்தி. அதை ஒரு அரசியல் கட்சியின் கீழ்நிலையில் இருப்பவர்கள், கோட்சே ஒரு மகாத்மா என்ற ரேஞ்சில் பேசுகிறவர்கள் கையில் எடுத்தால் தட்டி கேட்டு அடக்கி வைக்க சொல்லலாம்; ஆனால் ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றுகிற தேசத்தின் தலைமை அமைச்சரான பிரதமர் மோடியே இப்படி பேசுவது என்பது தேர்தல் அரசியல் களத்தில் பாரதூரமான விளைவுகளை நோக்கி தள்ளிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதும் அரசியல் வல்லுநர்களின் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications