இனி மக்களோடு நேரடி தொடர்பு.. வாட்ஸ்அப்பில் சேனல் தொடங்கிய பிரதமர் மோடி! இணைவது எப்படி? விபரம்
டெல்லி: பிரதமர் மோடி இன்று வாட்ஸ்அப்பில் புதிதாக சேனல் தொடங்கி உள்ளார். இதில் இணைவதன் மூலம் நேரடியாக பிரதமர் மோடியுடன் தொடர்பில் இருக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி.. அனைத்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தனது செயல்கள், வெளிநாடுகளின் பயணம் உள்பட பல்வேறு விஷயங்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி வாட்ஸ்அப்பில் புதிதாக சேனல் தொடங்கி உள்ளார். தற்போது ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ள அனைத்து மக்களும் வாட்ஸ்அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளை தந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வந்த அப்டேட் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் குறிப்பிட்ட நபர் மற்றும் குறிப்பிட்ட நிறுவனம் சேனல் தொடங்கி கொள்ள முடியும். இந்த சேனலில் பொதுமக்கள் தாமாகவே இணையலாம். இதன்மூலம் குறிப்பிட்ட அந்த சேனலில் பதிவு செய்வது என்பது அதில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சென்றடையும். இந்நிலையில் தான் வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் மோடி கணக்கு திறந்துள்ளார்.
Narendra Modi என்ற பெயரில் பிரதமர் மோடி கணக்கு திறந்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இருக்கும் போட்டோவை முதல் படமாக பகிர்ந்து ‛‛வாட்ஸ்அப்பில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் மக்களுடன் நெருங்கி பழகவும், தொடர்புகளை அதிகரிக்கவும் புதிய வாய்ப்பு உருவாகும்'' என்றார்.

பிரதமர் மோடி இந்த வாட்ஸ்அப் சேனலை இன்று தொடங்கினார். மாலை 3.53 மணிக்கு முதல் போட்டோவை பகிர்ந்தார். அந்த போட்டோவுக்கு 47.2 ஆயிரம் பேர் ரியாக்ட் செய்துள்ளனர். அதோடு இன்று இரவு 8.30 மணி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 429 பேர் பிரதமர் மோடியின் வாட்ஸ்அப் சேனலில் இணைந்துள்ளனர்.
மேலும் பிரதமர் மோடியின் வாட்ஸ்அப் சேனலில் இணைய விரும்புவோர் தங்களின் வாட்ஸ்அப்பை ஓபன் செய்தவுடன் Updates என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது நமது செல்போனில் உள்ளவர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் விபரங்கள் காட்டும். அதன் இறுதியில் போனால் Find Channels என்ற ஆப்ஷன் வரும்.
இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் வாட்ஸ்அப்பில் சேனல் வைத்துள்ளவர்களின் விபரங்கள் வரும். அதில் Narendra Modi என சர்ச் செய்து பாலோ செய்தால் போதும். பிரதமர் மோடி வாட்ஸ்அப் சேனலில் போடும் அப்டேட்டுகளை வீட்டில் இருந்தே அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications