US Tariff: "விவசாய நலன்களில் சமரசம் இல்லை.. அதற்கு எந்த விலை கொடுக்கவும் ரெடி!" பிரதமர் மோடி திட்டவட்டம்
டெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்ளார். இது இரு நாட்டு வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே என்ன நடந்தாலும் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்போம் என்றும் அதில் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாலே உக்ரைன் போர் நடப்பதாகச் சொல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளார். முதலில் டிரம்ப் 25% வரி விதித்த நிலையில், இப்போது கூடுதலாக 25% வரி விதித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கான மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி
அதேநேரம் டிரம்ப் இந்த வரி விதிக்க மற்றொரு காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக உடன்படிக்கைக்குப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் விவசாய இறக்குமதிக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், இந்தியா அதற்கு உடன்படவில்லை. இந்த 50% வரியை அறிவிக்க அதுவும் கூட முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.
சமரசம் செய்ய முடியாது
இதற்கிடையே பிரதமர் மோடி இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விவசாயிகளின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை அளிப்போம் என்றும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.. ரஷ்ய எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து வாங்குவதால், இந்திய இறக்குமதிக்கு டிரம்ப் 50% வரி விதித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக மோடியின் பேச்சு பார்க்கப்படுகிறது.
எந்த விலை கொடுக்கவும் ரெடி
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "எங்களுக்கு, விவசாயிகளின் நலனே முதன்மையானது. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. இதற்கு நாம் ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று எனக்குத் தெரியும், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராகவே இருக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் நேற்று மேலும் 25% வரி விதித்துள்ள, மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்குத் தான் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. இருப்பினும், அதை இந்தியா ஏற்க மறுத்த நிலையில், இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்பு உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்தியா உறவு
அமெரிக்கா- இந்தியா உறவுகளில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாக டிரம்பின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் வணிக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் டிரம்ப் தடாலடியாக வரியை அறிவித்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த வரிகள் ஜவுளி, மருந்துகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற முக்கிய இந்திய ஏற்றுமதித் துறைகளைப் பாதிக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications