‛‛சொந்தஊர் காரன்-வே’’.. சர்வதேச டி20யில் ஓய்வு அறிவித்த ஜடேஜா! நன்றி + வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
டெல்லி: விராட் கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இன்று ஓய்வை அறிவித்தார். இதையடுத்து சொந்த ஊர் காரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.
ஐசிசி 20 ஓவர் உலககோப்பை போட்டியின் பைனல் நேற்று நடந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதாவது கடந்த 2007 ல் முதல் முதலாக இந்திய அணி தோனி தலைமையில் 20 ஓவர் உலககோப்பையை வென்றது.

அதன்பிறகு 17 ஆண்டு காத்திருப்புக்கு பின் நேற்றைய தினம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் உலககோப்பை யை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்னான விராட் கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்று கொள்வதாக கூறி ஓய்வை அறிவித்தார். அந்த வரிசையில் 3வது வீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இன்று தனது ஓய்வை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "நன்றி. நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் பாய்வது போல, நான் எப்பொழுதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைக் கொடுத்துள்ளேன். இனி அந்தப் பணி மற்ற வடிவங்களில் அதைத் தொடரும். டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளனர். அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தான் இன்று டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அன்புள்ள ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள். உங்களின் ஸ்டைலான பேட்டிங் மற்றும் ஸ்பின் ஆகியவற்றை கிரிக்கெட் பிரியர்கள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஜொலித்த உங்களுக்கு நன்றி. உங்களின் எதிர்கால முயற்சிக்கு என் வாழ்த்துகள் '' என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது. பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் குஜராத்தை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் பாஜகவுக்கு உறவு உள்ளது. அதாவது ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாபா ஜடேஜா குஜராத்தில் ஜாம் நகர் வடக்கு சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் சொந்த மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் நன்றி, வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிட்டதக்கது.












Click it and Unblock the Notifications