இங்கிலாந்து, மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி.. மொத்த இந்தியாவும் கவனிக்க வேண்டிய ஒப்பந்தம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். 4 நாட்கள் பயணமாக 23-ந் தேதி பிரதமர் மோடி பயணத்தை தொடங்குகிறார். முதல் இரண்டு நாட்கள் இங்கிலாந்து செல்லும் அவர், இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கொள்ள உள்ளதா தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மொத்த இந்தியாவும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், நாடாமன்றத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேநேரம் இதே காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக 4 நாட்கள் இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலில், 23 மற்றும் 24-ந் தேதிகளில் இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி, அங்கு என்ன திட்டத்தை செயல்படுத்த போகிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோடி இங்கிலாந்து பயணம்
பிரதமர் மோடி, பிரதமரான பின்னர் செல்லும் 4-வது முறையாக இங்கிலாந்து செல்கிறார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குறிப்பாக இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி, பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள். வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, பருவநிலை, சுகாதாரம், கல்வி, மக்களிடையிலான உறவுகள் ஆகியவை பற்றியும் விவாதிக்க உள்ளார்.
வரியில்லா வர்த்தகம்
அதேபோல் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளும் 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதன் இறுதியில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால்,இங்கிலாந்துக்கு 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது. இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார் மற்றும் இதர பொருட்களை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யும் என்கிறார்கள்.இந்த பயணத்தின் போது, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
மோடி மாலத்தீவு பயணம்
பின்னர், இங்கிலாந்தில் இருந்து 25-ந் தேதி பிரதமர் மோடி மாலத்தீவு செல்கிறார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவையாகும். மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு இந்திய தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை என்பது கவனிக்க வேண்டிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு சிறப்பு விருந்தினர்
முகமது முய்சுவின் சீன ஆதரவு நிலைப்பாட்டுன் இருக்கிறார். இதனால், இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் காணப்படுகிறது. எனவே பிரதமர் மோடி அங்கு செல்வதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முகமது முய்சுவுடன் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 26-ந் தேதி நடக்கும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications