அன்புமணி போலி ஆவணம் சமர்ப்பித்துள்ளார்.. டெல்லி காவல் நிலையத்தில் ராமதாஸ் பரபர புகார்
டெல்லி: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே உச்சகட்ட மோதல் நிலவி கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி கட்சிக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அன்புமணிக்கு செக் வைக்கும் விதமாக ராமதாஸ் தரப்பு காவல்நிலையத்தில் புகாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக வில் தந்தை மகன் யுத்தம் பெரியளவு வெடித்து கொண்டிருக்கிறது. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ், அன்புமணி இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். பாமக தங்களுடையதுதான் என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

அன்புமணி மீது புகார்
பாமக எங்களுடையது. மாம்பலம் சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். தேர்தல் ஆணையமும் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராமதாஸ் சார்பில் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையியல் நீதிமன்றம் சென்று முறையிடுங்கள் என்று கூறியிருந்தனர்
போலி ஆவணங்கள்
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது, பாமக கௌரவ தலைவராக உள்ள ஜி.கே மணி புகார் அளித்துள்ளார். அதில் அவர், "அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. போலியான ஆவணங்களை வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை வேண்டும்." என்று கூறியுள்ளார்.
விரைவில் விசாரணை
இந்த மனுவை டெல்லி காவல் நிலையம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அன்புமணி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. விரைவில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி தரப்பில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications