வெறும் 2 ரூபாய்தான் சொத்து.. 6ம் கட்ட லோக்சபா தேர்தலின் மிகவும் ஏழ்மையான வேட்பாளர் இவர்தான்!
டெல்லி: லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், இன்று 58 தொகுதிகளில் 6ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெறும் 2 ரூபாய் மட்டுமே சொத்து வைத்துள்ள நபர் வேட்பாளராக களமிறங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிசா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 6 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்டமாக மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,
ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும்
மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 58 லோக்சபா தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் தலைவர் கன்ஹையா குமார், பன்சூரி சுவராஜ், மனோஜ் திவாரி, மெகபூபா முப்தி முக்கிய வேட்பாளர்களாக கவனம் பெற்றிருக்கின்றனர். இதைவிட, வெறும் 2 ரூபாய் மட்டுமே சொத்து கொண்ட வெட்பாளர் அதிக கவனம் ஈர்த்திருக்கிறார்.
அதாவது மாஸ்டர் ரந்தீர் சிங் என்பவர் ஹரியானா மாநிலம் ரோதக் தொகுதியில் போட்டியிடுகிறார். மொத்தமுள்ள 889 வேட்பாளர்களில் இவருக்குதான் குறைந்த அளவில் சொத்து இருக்கிறது. தனது பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு வெறும் 2 ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது கையிருப்பாக 1 ரூபாய் இருப்பதாகவும், எஸ்பிஐ வங்கி கணக்கில் 1 ரூபாய் இருப்பதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார்.
முதலீடுகள், சேமிப்புகள் அல்லது காப்பீட்டுக் பாலிசி, நிலம், வீடு, பைக், சைக்கிள் என எதுவும் இல்லை என்று தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல இவருக்கு நேர் எதிராக, 6ம் கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளராக நவீன் ஜிண்டால் இருக்கிறார். ஹரியானா முன்னாள் அமைச்சர் சாவித்ரி ஜிண்டாலின் மகன் ஆவார். இவருக்கு ரூ.1,230 கோடி சொத்து இருக்கிறது. இவர் குருசேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications